சிடியில் எழுதுகிறீர்களா? கவனம் தேவை

சிடியில் எழுதுகிறீர்களா? கவனம் தேவை பிளாஷ் டிரைவ்கள் அதிகம் பயன்படுத்தப் பட்டாலும், இன்னும் சிடி, டிவிடி பயன்பாடு முற்றிலும் மறையவில்லை. பல சாதனங்களில் நாம் சிடிக்களையே பயன்படுத்தி வருகிறோம். மேலும் பாதுகாப்பான பயன்பாட்டினை சிடிக்கள் தருகின்றன. மேலும் இவற்றை எந்த வகையான டிஜிட்டல் சாதனங்களிலும் பயன்படுத்தலாம் என்பது ஒரு கூடுதல் சிறப்பு. சிடிக்களைப் பொறுத்தவரை, அதில் டேட்டாக்களை எழுதுகையில்தான் அதிகக் கவனம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவற்றை இங்கு காணலாம். 1. உங்களுடைய கம்ப்யூட்டரில் சிடி அல்லது டிவிடியில் பைல்களை எழுதுகையில் பிற புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருந்தால் அவற்றை நிறுத்துவது நல்லது. ஒரே நேரத்தில் பலவகை புரோகிராம்களை இயக்குவது தான் இன்றைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சிறப்பு என்றாலும் மல்ட்டி மீடியா அம்சங்கள் அதிகமாகக் கொண்ட இன்டர்நெட் தளங்களை பார்த்துக் கொண்டிருக்கையில் சிடி / டிவிடிக்களில் எழுதுவது பாதிக்கப்படலாம். எனவே இன்டர்நெட் தொடர்பினையே நிறுத்திவைப்பது நல்லது. அதே போல சிபியு பயன்பாட்டினைக் குறைத்திட உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பயர்வால், வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்களையும் நிறுத்தி வைப்பது நல்லது. இல்லை என்றால் நிச்சயமாக பபர் அன்டர் ரன் என்ற பிரச்னை சிடி எழுதும் பணியில் எதிர்கொள்ள நேரிடும். கூடுதல் இயக்கங்கள் சிடியில் எழுதுவதைத் தடுக்காது என்றாலும், பல சிக்கல்கள் ஏற்படுவதை நிறுத்தும். 2. நீங்கள் பயன்படுத்தும் பர்னிங் சாப்ட்வேர் தொகுப்பினைத் தந்துள்ள நிறுவனத்தின் இணைய தளம் சென்று அதில் புதியதாக ஏதேனும் டிரைவர்கள் போட்டிருந்தால் அவற்றை இறக்கிப் பதிந்து கொள்வது நல்லது. 3. சிடி / டிவிடிக்களில் பைல்களை எழுத வெவ்வேறு பர்னிங் சாப்ட்வேர் தொகுப்புகளைப் பயன்படுத்து வது நல்லது. விண்டோஸ் தொகுப்பில் ஒன்று இணைந்தே கிடைக்கிறது. இது தவிர இலவசமாக பல கிடைக்கின்றன. அவை : * Acoustica http://www.acoustica.com/ * Nero http://www.nero.com/ * NTI Software http://www.ntius.com/ * Roxio http://www.roxio.com/ இவை சிடிக்களிலும் கிடைக்கின்றன. இவற்றையும் அவ்வப்போது பயன்படுத்துவது நல்லது. எது உங்களுக்கு எளிதாகவும் உகந்ததாகவும் தோன்றுகிறதோ, அவற்றை அடிக்கடி பயன்படுத்தலாம். 4. ஒரு சிடி / டிவிடியில் எழுத அது தாங்கிக் கொள்ளும் அதிக பட்ச வேகம் என்னவென்று அந்த சிடியில் இருக்கும். அதைக் காட்டிலும் சிறிது குறைவான வேகத்தில் பைல்களை எழுதவும். இவ்வாறு எழுதும் வகையில் உங்களின் பர்னிங் சாப்ட்வேர் அமைக்கப்படும் வசதியினைப் பெற்றிருக்க வேண்டும். 5. உங்களுடைய பர்னிங் சாப்ட்வேரில் அன்டர் ரன் பாதுகாப்பு உள்ளதா என்பதனை உறுதி செய்து கொள்ளவும். சிடி / டிவிடியில் தகவல் எழுதப்படுகையில் அந்த வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொடர்ந்து தகவல்களை அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி இல்லாத போது தான் இந்த அன்டர் ரன் பிரச்னை வரும். இதனைச் சமாளித்திடும் நிலையில் பர்னிங் சாப்ட்வேர் இருக்க வேண்டும். இல்லை என்றால் சிடி / டிவிடி கரப்ட் ஆகிவிடும். 6. பல பர்னிங் சாப்ட்வேர் தொகுப்புகளில் பைல்களை எழுதி முடித்த பின்னர் தகவல்கள் சரியாக எழுதப்பட்டுள்ளனவா என சோதித்து அறியும் டேட்டா வெரிபிகேஷன் என்னும் வழிமுறை தரப்பட்டிருக்கும். இதன் மூலம் எந்தவிதமான பிழைகளும் இல்லாமல் சிடி/டிவிடிக்கள் எழுதப்பட்டுள்ளனவா என்பதனை உறுதி செய்து கொள்ளலாம். இருப்பினும் இது 100% உறுதிதானா என்பதனை உறுதியாகக் கூற முடியாது. நாட்கள் செல்லச் செல்ல இவை பயனற்றுப் போக வாய்ப்புண்டு. எனவே பைல்களை பேக்கப் எடுப்பதாக இருந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட சிடி / டிவிடி காப்பிகள் எடுப்பது நல்லது. அல்லது வேறு ஹார்ட் டிஸ்க்குகளில் பதிந்து வைப்பதுவும் நல்லது. 7. மொத்தமாக சிடி/டிவிடிக்களை சொற்ப விலைக்கு வாங்கிப் பயன்படுத்துவது அந்த நேரத்திற்கு காசை மிச்சம் பண்ணும். ஆனால் காசைக் காட்டிலும் அதிக மதிப்புள்ள தகவல்கள் அடங்கிய பைல்கள் கிடைக்காமல் போய்விடும். எனவே நல்ல நிறுவனங்களின் பெயர்களில் வரும் சிடி/டிவிடிக்களையே பயன்படுத்தவும். 8. சிடியில் எழுதி முடித்த பின் ஐ.எஸ்.ஓ. பைல் குறித்து ஒரு கேள்வி கேட்கப்படும். நாம் இது என்ன என்று அறியாமலேயே தவிர்த்துவிடுவோம். ஒரு சிடி / டிவிடியில் உள்ள அனைத்து பைல்களின் அடங்கலை ஒரு தோற்றமாகத் தரும் பைல் ஐ.எஸ்.ஓ. பைல் ஆகும். பர்னிங் சாப்ட்வேர் தொகுப்புகள் இந்த பைல்களை நேரடியாக எடுத்துக் கொண்டு அப்படியே சிடி / டிவிடிக்களில் எழுதும் திறன் கொண்டவை. ஒரு சிடி /டிவிடி யில் உள்ள தகவல்களை இன்டர்நெட் வழியே தருவதற்கு இந்த வகை பைல்கள் ஏற்றவை. எடுத்துக் காட்டாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இந்த வகையிலேயே இன்டர்நெட் வழி தந்தது. பைல்களைச் சுருக்குவதற்கு ZIP மற்றும் RAR போன்ற பைல்கள் இருந்தாலும் இவற்றை விரித்துப் பின்னர் தான் சிடி/டிவிடிக்களில் பதிய முடியும். ஆனால் ஐ.எஸ்.ஓ. பைல்களை பர்னிங் சாப்ட்வேர் தொகுப்புகளே விரித்துப் பதிந்து கொடுக்கும். http://www.dinamalar.com/Supplementary/cmalar_detail.asp?news_id=1152

Advertisements

அறிவியல் அறிவோம்

அறிவியல் அறிவோம் அறிவியல் வளர்ச்சிக்கு இன்று சிறந்த ஊன்று கோலாக இயங்குவது இணையதளம் என்றால் அது மிகையாகாது. தகவல் தேடலின் மூலமாகவும் அதன் அடிப்படையிலும், அறிவியலின் இன்றைய வளர்ச்சியையும் அது செல்லும் பாதையையும் இன்று எளிதாகக் கற்றுக் கொள்ள முடிகிறது. அறிவியலில் ஆர்வமுள்ள மாணவர்களுக்காகவே, ஆர்வம் என்பதன் ஆங்கிலச் சொல்லான Curiocity (Curiosity) என்ற பெயரில் ஓர் இணையதளம் இயங்குகிறது. ஆர்வத்திற்கு தூபம் போட்டு வளர்க்கும் ஒரு நகரமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த உலகின் இயக்க நிலைகள் குறித்து ஏதேனும் சந்தேகம் உள்ளதா? ஏதேனும் ஒன்று எப்படி இயங்குகிறது என்ற வினா மனதில் உள்ளதா/ இந்த தளம் செல்லுங்கள். அண்டு க்ண் என்ற பிரிவில் சென்று உங்கள் கேள்வியை டைப் செய்திடுங்கள். தொடர்ந்து உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, பள்ளியில் உங்கள் வகுப்புநிலை,வசிக்கும் நகரம் என தகவல்களையும் கொடுங்கள். உங்களுக்கான பதில் அனுப்பப்படும். கேள்வி கேட்பது மட்டுமின்றி, ஏற்கனவே கேட்ட கேள்விகளையும் அவற்றிற்கான பதில்களையும் அதில் பிரவுஸ் செய்து பார்க்கலாம். இந்த தளத்தில் எனக்குப் பிடித்தது பரிசோதனைச் சாலை (The Lab) பிரிவுதான். ஏதேனும் பரிசோதனை ஒன்றை செய்து பார்க்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், அதற்கான வழிமுறைகள், தேவையான பொருட்கள் ஆகியவற்றைத் தந்து எப்படி பரிசோதனையை மேற்கொள்வது என்ற வழிமுறைகளைக் கற்றுத் தருகிறது. நாம் அன்றாடம் சந்திக்கும் பொருட்கள் குறித்த அறிவியல் தகவல்களைத் தருகிறது Everyday Science என்ற பிரிவு. நான் இதனைப் பார்க்கும் போது முப்பரிமாணப் படம் குறித்த தகவல்கள் விரிவாகத் தரப்பட்டிருந்தன. இன்றைய திரைப்படங்கள் மட்டுமின்றி, டிவிக்களும் முப்பரிமாணக் காட்சிக்கு மாறிக் கொண்டிருக்கும் வேளையில் இது அனைவரும் அறிய வேண்டிய விஷயமாகும். இந்த தளத்தில் நீங்கள் எங்கு பிரவுஸ் செய்தாலும், அறிவியல் குறித்து எதனையாவது கற்றுக் கொள்வீர்கள் என்பது உறுதி. இந்த தளம் கிடைக்கும் முகவரி http://www.curiocity.ca/

ஏப்ரல்-1 முட்டாள்கள் தினம்

ஏப்ரல்-1 முட்டாள்கள் தினம் உங்களை ஏமாற்றுவார்கள்; உஷாராக இருங்கள்


ஒருவரை ஒருவர் ஏமாற்றி கேலி செய்து சிரிப்பதில் தான் மனிதர்களுக்கு எவ்வளவு ஆனந்தம்.அதனால் தானோ என்னவோ அடுத்தவரை ஏமாற்றுவற்கு என்றே ஒரு தினத்தையும் உருவாக்கி வைத்துள்ளனர். அதுதான் ஏப்ரல்-1 முட்டாள் தினம். இந்த தினம் நாளை வருகிறது. உங்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக உங்கள் நண்பர்கள் பல நாட்களாக மூளையை கசக்கி ஏதாவது ஒரு திட்டத்தை உருவாக்கி வைத்து தயாராக இருப்பார்கள்.

 
அட நான் என்ன ஏமாற்றக் கூடிய ஆளா? என்று அலட்சியமாக இருந்தால் சரியாக மாட்டி கொள்வீர்கள்.

 
நீங்கள் உண்மையிலேயே உஷார் பார்ட்டிதான் என்பதை நிரூபிக்க வேண்டுமானால் எப்போதும் நாளை முழுவதும் இதே சிந்தனையிலேயே இருங்கள் ஓரளவு தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது.

 
ஏப்ரல் 1-ந்தேதி முட்டாள் தினம் எப்படி வந்தது இதற்கு ஒரு பெரிய வரலாறே இருக்கிறது.

 
பண்டை காலத்தில் ரோமானியர்களும், இந்துக்களும் ஏப்ரல்-1 மற்றும் அதை ஒட்டிய தேதிகளை புத்தாண்டாக கொண்டாடினார்கள். அப்போது ஐரோப்பிய நாடுகளில் நாட்களை குறிப்பிட ஜுலியன் காலண்டர் என்ற பழங்கால காலண்டரை பயன்படுத்தி வந்தனர். அதிலும் புத்தாண்டு தினம் ஏப்ரல் 1-ந் தேதியாக இருந்தது.

 
1582-ம் ஆண்டு போப் ஆண்டவராக இருந்த 13-ம் கிரிகோரி ஜார்ஜியின் காலண்டர் என்ற புதிய காலண்டரை அறிமுகப்படுத்தினார். அதில் புத்தாண்டு ஜனவரி 1-ந்தேதி பிறப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

 
இனி மக்கள் இந்த காலண்டரை தான் பின்பற்ற வேண்டும் என்றும் போப் ஆண்டவர் உத்தரவிட்டார்.

 
இதை பிரான்ஸ் நாடு உடனே ஏற்றுக்கொண்டது. பிரான்சு மன்னர் அந்த நாட்டு மக்களை புதிய காலண்டரை பின்பற்றும்படி கேட்டுக் கொண்டார். அதை ஏற்று அனைவரும் ஜனவரி 1-ந்தேதியை புத்தாண்டு தினமாக கொண்டாடினார்கள்.

 
வேறு சில நாடுகளும் இதை ஏற்றுக் கொண்டன. இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் புதிய காலண்டரை பின் பற்றவில்லை. சில பகுதி மக்களுக்கு காலண்டர் மாற்றப்பட்டு இருக்கும் தகவலே சென்றடைய வில்லை. எனவே அவர்கள் முன்பு போல ஏப்ரல் 1-ந்தேதியை புத்தாண்டாக கொண்டாடி கொண்டு இருந்தனர்.

 
விவரம் தெரியாமல் இவர்கள் இன்னும் ஏப்ரல் 1-ந்தேதியை புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள் என்று புதிய காலண்டர் முறையை பின் பற்றியவர்கள் கருதினார்கள்.

 
எனவே எப்ரல் 1-ந்தேதி புத்தாண்டு கொண்டாடியவர்களை அவர்கள் முட்டாள்களாக கருதினார்கள். கேலி செய்து ஏராளமாக பேசினார்கள்.

 
கால போக்கில் ஏப்ரல் 1-ந்தேதி என்றாளே முட்டாள்கள் தினம் என்று ஆனது. அன்றைய தினத்தை அடுத்தவரை ஏமாற்றும் தினமாகவும் மாற்றி கொண்டனர்.

 
ஏப்ரல் 1-ந்தேதி முட்டாள் தினம் ஆனது. குறித்து வேறு சில கதைகளும் சொல்லப்படுகின்றன.

 

உலகம் முழுவதிலும் ஏப்ரல் 1-ந்தேதி முட்டாள் தினமாக கடைபிடிக்கப் பட்டாலும் மெக்சிகோ நாட்டில் மட்டும் டிசம்பர் 28-ந்தேதியை முட்டாள் தினமாக கொண்டாடுகின்றனர். அந்த நாட்டு மன்னர் ஷெராட் அப்பாலி குழந்தைகளை டிசம்பர் 28-ந்தேதி கொடூரமாக கொலை செய்தார். எனவே அவனை முட்டாளாக சித்தரித்து அன்றயை தினத்தை முட்டாள் தினமாக கடைபிடிக்கிறார்கள்.

சாக்ரடிஸ் மரணம் (சுட்டது)

சாக்ரடிஸின் மரணம்

Cover Image Socrates -4  

(கி. மு. 469–399)  

மூவங்க நாடகம்
காட்சி -1 பாகம் -1
  

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
  


  

“நாம் என்னதான் சாக்ரடிஸைப் பற்றி ஐயுற்றாலும், (அவரைப் பற்றி எழுதிய சீடர்) பிளாடோ உலகத்திலே உன்னத உள்ளமும், உயர்ந்த ஆன்மீக ஞானமும் பெற்றவர்.  பிளாடோவைச் சிறந்த வேதாந்த ஞானியாக ஊக்கியது அவரது குருநாதர் சாக்ரடிஸின் சிந்தனா சக்தியே,”  

பெர்டிராண்டு ரஸ்ஸல். (1872 – 1970)  

“ஒரு நேர்மையான மனிதன் சிறு குழந்தையைப் போன்றவன்.”  

“அனைத்து மனிதரின் ஆத்மாக்களும் அழியாத் தன்மை (Immortal) படைத்தவை.  ஆனால் அவற்றில் நன்னெறியோடு வாழும் ஆத்மாக்கள் தெய்வீகத்தனம் பெற்றவை.”  

“என்னைப் பொருத்த வரை எனக்குத் தெரிந்தது இதுதான் : ‘எனக்கு ஒன்றும் தெரியாது.’ என்பது.”  

“அழகு என்பது அற்ப ஆயுளுடைய ஒரு கொடுங்கோல் ஆட்சி.”  

“எப்படி முயன்றாயினும் திருமணத்தைச் செய்து கொள் !  நற்குண மனைவி ஒருத்தி அமைந்தால் நீ மகிழ்ச்சி அடைவாய் !  துர்க்குண மனைவி கிடைத்தால் நீ வேதாந்தி ஆவாய் !”  

சாக்ரடிஸ்  

Fig 3 Socrates & Plato -1
  

முன்னுரை:  

உன்னத சித்தாந்த மேதை சாக்ரடிஸை வழக்கு மன்றத்தில் கி. மு 399 இல் விசாரணை செய்து மரண தண்டனை விதிக்கப்பட்ட போது அவருக்கு வயது எழுபது !  அந்த கிரேக்க ஞானி சாக்ரடிஸ் ஏதென்ஸ் நகரில் வாழ்ந்து வந்த ஒரு சிற்பக் கலைஞர்.  அப்போது நிகழ்ந்த 25 ஆண்டு காலப் போரில் ஸ்பார்டா ஏதென்ஸை கி. மு. 404 இல் தோற்கடித்தது !  அதைத் தொடர்ந்த புரட்சியில் பின்னர் குடியரசு நிலைநாட்டப் பட்டது.  சாக்ரடிஸ் மேற்திசை நாடுகளின் முதற் சித்தாந்த ஞானியாக மதிக்கப் படுகிறார்.  அவர் வேதாந்தச் சிந்தனையாளர்.  உரையாடல் மூலம் மெய்யான ஞானத்தை அறிந்திட வினாக்களைக் கேட்பவர்.  மேற்திசை வேதாந்த அடிப்படைக்கு வித்திட்டு விருத்தி செய்தவர் இருவர்.  சாக்ரடிசும் அவரது சீடர் பிளாடோவும் மெய்ப்பாடுகளைத் தேடும் சிந்தனா முறைகளுக்கு வழிகாட்டியவர்.  சாக்ரடிஸ் போரில் பங்கெடுத்த ஒரு தீரர்.  போருக்குப் பின் நேர்ந்த அரசாங்கத் கொந்தளிப்பில் ஏதென்ஸ் நகரத்தில் இடையூறுகள் நிரம்பின. சாக்ரடிஸ் ஓய்வெடுத்துக் கல் கொத்தனாராய் உழைத்துத் தன் குழந்தைகளையும், மனைவியையும் காப்பாற்றி வந்தார்.  மனைவியின் பெயர் : ஷான்திப்பி (Xanthippe). //   

சாக்ரடிஸ் வாலிப மாணவரிடம் வினாக்களைக் கேட்பதைத் தவிர தன் கைப்பட வேறெந்த நூலையும் எழுதவில்லை.  அவரது பிரதானச் சீடர் பிளாடோவின் உரையாடல்கள் மூலம் குருவின் பண்பாடுகளும் கோட்பாடுகளும் வரலாற்றில் பதிவாகியுள்ளன.  சாக்ரடிஸ் தன் பிற்கால வாழ்வை ஏதென்ஸ் நகர இளைஞருடன் வேதாந்த நெறிப்பாடுகளை உரையாடிக் கழித்தார்.  உலோகாயுதச் செல்வீக வெற்றி (Material Success) பெற்ற அந்த இளைஞர் அனைவரும் சாக்ரடிஸிடம் பெரு மதிப்பு வைத்திருந்தார்.  இளைஞர் பலரைக் கவர்ந்த சாக்ரடிஸ் மீது இளைஞரின் பெற்றோருக்குப் பெரு வெறுப்பு உண்டானது !  இறுதியில் சாக்ரடிஸ் குற்றம் சாற்றப்பட்டு விசாரணைக்கு இழுத்து வரப்பட்டு ஏதென்ஸ் இளைஞர் மனதைக் கெடுத்தார் என்று கிரேக்க ஜூரர்களால் பழி சுமத்தப்பட்டார்.  அதன் பயங்கர விளைவு : அவருக்கு மரண தண்டனை ! சாக்ரடிஸ் குற்றத்தை ஏற்றுக் கொண்டு இறுதியாகச் சிறையில் ஹெம்லாக் நஞ்சைக் (Hemlock Poison Plant) குடித்துத் தன்னுயிரைப் போக்கிக் கொண்டார்.  

Fig 1A Socrates & Plato -2  

சாக்ரடிஸ் கி. மு. 470 இல் கிரேக்க நாட்டின் கூட்டாட்சி பெர்ஸியன் படையெடுப்பைத் தடுத்து விரட்டிய பிறகு ஏதென்ஸ் நகரில் பிறந்தார்.  அவரது தந்தையார் ஒரு சிற்பக்கலை வல்லுநர்.  தாயார் கர்ப்பவதிகளுக்குப் பேறு காலம் பார்க்கும் மருத்துவச்சி.  சாக்ரடிஸ் காலத்தில் கிரேக்க நகரங்களுக்குள் குறிப்பாக ஏதென்சுக்கும் ஸ்பார்டாவுக்கும் பல சமயங்கள் கசப்பான போர்கள் நிகழ்ந்தன.  சாக்ரடிஸ் இராணுவத்தில் சேர்ந்து மூன்று போர் அரங்குகளில் தீவிரமாகப் போராடித் தனது அபார உடலின் சகிப்புத் தன்மையை எடுத்துக் காட்டினார்.  

சாக்ரடிஸ் தன்னைப் பற்றி நூல் எதுவும் எழுதாததால் நான்கு முறைகளில் அவரைப் பற்றி அறிய முடிகிறது.  முதலாவது சாக்ரடிஸ் காலத்தில் வெளியான பிற நூல்களிலிருந்து தெரிந்தவை.  இரண்டாவது சாக்ரடிஸ் மரணத்துக்குப் பிறகு அவரைப் பற்றி அறிந்தோர் வெளியிட்ட நூல்கள் மூலம் அறிந்தது.  மூன்றாவது பற்பல பதிவுகளில் பரம்பரையாய்க் காணப்படுபவை.  நான்காவது சாக்ரடிஸின் தனிப்பட்ட மனிதத் தூண்டல்கள் (Personal Influence).  இந்த நான்கு மூலங்களும் ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளதால் அவற்றில் கூறப்படுபவை எல்லாம் ஒருவரைக் குறிப்பிடுவனவா என்னும் பெருத்த ஐயப்பாடு உண்டாகிறது !  ஆயினும் சாக்ரடிஸின் வரலாறுக் கூற்றுக்களை இரண்டு மூலாதார நூல்கள் அழுத்தமாக எடுத்துக் காட்டுகின்றன.  அவை இரண்டும் சாக்ரடிஸ் இறந்த பிறகு அவரைப் பற்றி நன்கு அறிந்தோர் எழுதிய நூல்கள்.  1.  பிளாடோவின் உரையாடல்கள் (The Dialogues of Plato)  2.  “ஸெனோ·பன் என்பவரின் நினைவுப் பதிவு” (The Memorabilia of Xenophon).  எழுபது வயது சாக்ரடிசுக்கு ஏதென்ஸ் விசாரணையில் தீர்வு கூறப்படும் போது பிளாடோவுக்கு வயது இருபத்தியெட்டு !  குருவுக்கு விசாரணை நடக்கும் போது பிளாடோ அதை நேரடியாகக் கண்டிருக்கிறார்.  மேலும் சாக்ரடிஸிடம் பிளாடோ எட்டு வருடமாகப் படித்துக் கொண்டு வந்திருக்கிறார். //   

Wife Dousing Socrates  

பிளாடோவின் உரையாடல்களில் (The Dialogues of Plato) சாக்ரடிஸ்  

பிளாடோவின் உரையாடல் நூல்கள் பற்பல பதிவாகியுள்ளன.  ஏறக் குறைய அவற்றில் வரும் பிரதான மனிதர் அவரது குருநாதர் சாக்ரடிஸ்தான்.  இதில் உள்ள ஒரு பிரச்சனை என்ன வென்றால் மெய்யான வரலாற்றுச் சாக்ரடிஸ் யார் என்று அறிந்து கொள்ள முடியாமல் போவது !  பிளாடோ கலைத்துவ முறையில் எடுத்துக் காட்டிய சாக்ரடிஸ் மெய்யான சாக்ரடிஸா என்பதை நிர்ணயம் செய்வது கடினம்.  நாடக நிபுணர் பிளாடோ தனது குருநாதர் பண்பாட்டை மிகைப் படுத்திக் கூறக் கூடிய திறமை உள்ளவர்.  சாக்ரடிஸ் ஒரு பெரும் சிந்தனாவாதி என்றால் அவரது சீடர் பிளாடோ உன்னத வேதாந்தியாகக் கருதப் படுகிறார்.  பிளாடோவின் உரையாடலில் இருவித வேறுபாட்டுப் பண்பாடுகள் உடைய சாக்ரடிஸ் காட்டப் படுகிறார்.  ஒன்று தனக்கென ஒரு தனித்துவக் கொள்கை இல்லாத ஓர் அப்பாவி வயோதிக மனிதர்.  இரண்டாவது தனித்துவக் கோட்பாடு கொண்டு வினாக்களைக் கேட்டு மாணவரின் மனக்கருத்தைத் தெரிந்து கொள்ளும் சாக்ரடிஸ்.  இந்த நாடகத்தில் காட்டப்படும் சாக்ரடிஸ், முழுக்க முழுக்க பிளாடோ எடுத்துக் கூறிய சாக்ரடிஸ்.  அதாவது சில சமயம் சாக்ரடிஸ் ஓர் அப்பாவியாக இருப்பார் !  சில சமயம் அதிகாரத்தோடு முழக்கும் ஓர் உபதேசியாக இருப்பார் !  பிளாடோ தன் உரையாடல்களில் கையாண்டு சாக்ரடிஸ் பண்பாடுகளைப் பற்றி எழுதிய சொற்றொடர்கள் இந்த நாடகத்திலும் எடுத்தாளப் பட்டுள்ளன.  

Fig 3 Socrates Influencing the Youths  

சாக்ரடிஸ் விசாரணை, மரண நாடகம்
  

இந்த மூவங்க நாடகம் சாக்ரடிஸின் முழு வாழ்கை வரலாறைக் கூறுவதில்லை.  அவரைப் பற்றிய கால நிகழ்ச்சிக் குறிப்புக்களும் அல்ல.  அவரது இறுதிக்காலத்தில் நிகழ்ந்த துன்பியல் சம்பவம்.  நிகழ்ச்சிகள் பற்பல சுருக்கப்பட்டு நாடகப் படைப்பு சாக்ரடிஸ் மரணக் காரணத்தை ஓரளவு எடுத்துக் காட்டுகிறது.  சாக்ரடிஸ் மரணச் சம்பவம் முடிவில் ஒன்றாய் இருந்தாலும் அந்த நாடகத்தை எழுதிய பல்வேறு ஆசிரியர்கள் வெவ்வேறு வித வசனங்களில் எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.  இந்தப் பகுதியில் எழுதப்படும் கனடா நாடக மேதை, லிஸ்டர் ஸின்கிளேர் நாடகம்தான் மெய்யானது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. குறிப்பாக நாம் அறிந்து கொள்ளக் கூடியது இதுதான் :  ஏதென்ஸ் நகரவாதிகள் பலர் சாக்ரடிஸின் பகைவர்.  தனித்துவ முறையில் வினாக்களை எழுப்பி மெய்ப்பாடுகளை வாலிப மாணவருக்கு ஞானமாகக் காட்டினார்.  அதனால் ஏதென்ஸ் மக்களின் வெறுப்பைப் பெற்றார்.  அவரைப் பழிக்குற்றம் சாற்றிச் சிறைசெய்து நஞ்சு கொடுத்துக் கொன்றனர் என்னும் வரலாற்றை வலியுறுத்திக் கூறுவதே இந்த நாடகத்தின் குறிக்கோள் !  அவரது வாசகம் இது: “நேர்மை என்பது ஒரு வகை ஞானம்.” (Virtue is a kind of Wisdom). கவிஞர் கதைகளில் அழுத்தமாய்க் கூறிவரும் காட்டுமிராண்டிகளின் தெய்வத்திலிருந்து வேறுபடாதது கடவுள்களின் பிதா ஜீயஸ் (Zeus – The Father of the Gods) என்று சாக்ரடிஸ் குறிப்பிட்டதாகத் தெரிகிறது. //   

Fig 4 Death of Socrates with Poison  

பெர்டிராண்டு ரஸ்ஸல் அவரைப் பற்றிக் குறிப்பிடும் போது “நாம் என்னதான் சாக்ரடிஸைப் பற்றி ஐயுற்றாலும், (அவரைப் பற்றி எழுதிய சீடர்) பிளாடோ உலகத்திலே உன்னத உள்ளமும், உயர்ந்த ஆன்மீக ஞானமும் பெற்றவர்.  பிளாடோவைச் சிறந்த வேதாந்த ஞானியாக ஊக்கியது அவரது குருநாதர் சாக்ரடிஸின் சிந்தனா சக்தியே,” என்று அழுத்தமாகக் கூறுகிறார்.  

ஏதென்ஸ் நகரில் ஆரஞ்சுப் பழங்கள் ஆப்பிள் பழங்களாய் இருப்பினும் அவற்றைப் பெரும்பாலும் கிரேக்கர் அந்தக் காலத்தில் தின்பதில்லை.  ஆனால் ஆக்டபஸ் கடல்மீனை (Octopus) ஏதென்ஸ் மக்கள் அதிகம் தின்றதாகத் தெரிகிறது  

 

 

தாமஸ் ஆல்வா எடிஸன் (சுட்டது)

ஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்

Edison Electric Bulb  

(1847–1931)  

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா  


  

“படைப்புக்கு வேண்டியது ஆக்கும் உள்ளெழுச்சி ஒரு சதவீதம்.  வேர்க்கும் உழைப்பு 99 சதவீதம்.”  

தாமஸ் ஆல்வா எடிசன்  

“அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடலலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு, பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி படைப்போம்.”  

தாமஸ் ஆல்வா எடிஸன் [ஆகஸ்டு 22, 1921]  


  

படிக்காத மேதை ! பட்டம் பெறாத மேதை !   

‘எப்படி நூற்றுக் கணக்கான புது யந்திரச் சாதனங்களைக் கண்டு பிடித்தீர்கள் ‘ என்று ஒருவர் கேட்டதும், ‘படைப்புக்கு வேண்டியது, ஆக்கும் உள்ளெழுச்சி 1 சதவீதம், வேர்க்கும் உழைப்பு 99 சதவீதம் [1% Inspiration & 99% Pespiration] ‘ என்று தாமஸ் ஆல்வா எடிசன் பதில் அளித்தாராம். எடிசன் தனியாகவோ, இணைந்தோ படைத்த அரும்பெரும் சாதனங்கள், ஆயிரத்துக்கும் மேலானவை! நவீன மின்சார யந்திர யுகத்தை அமெரிக்காவில் உருவாக்கியவர், எடிசன்! உலகின் முதல் தொழிற்துறை ஆய்வுக் கூடத்தை [Industrial Research Centre] அமெரிக்காவில் தோற்றுவித்தவர், எடிசன்! 18-19 நூற்றாண்டுகளில் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் மின்சக்தி யந்திர யுகம் தோன்ற அடிகோலியவர்களுள் முக்கியமானவர், எடிசன்! அவரது உயர்ந்த படைப்புகள்: முதல் மின்சாரக் குமிழி [Electric Bulb], மின்சார ஜனனி & மோட்டார் [Electric Generator & Motor], மின்சார இருப்புப் பாதை, [Electric Railroad], மின்சக்தி வர்த்தகத் துறை, தொலைபேசி வாய்க்கருவி [Telephone Speaker], ஒலிபெருக்கி [Microphone], கிராமஃபோன் [Phonograph], மூவிக் காமிரா [Movie Camera] போன்றவை. முதலில் மின் விளக்கை உருவாக்கிடும் போது, எடிசனுக்கு அதற்கு அடிப்படையான ‘ஓம்ஸ் நியதி ‘ [Ohm ‘s Law] பற்றி எதுவும் தெரியாது! எடிசன் ஒழுங்கான பள்ளிப் படிப்போ, உயர்ந்த பட்டப் படிப்போ எதுவும் அற்றவர்! கடின உழைப்பாலும், ஞான நுட்பத்தாலும் பலவிதச் சாதனங்களைப் படைத்து ஏழ்மையிலிருந்து செல்வந்தரான ஒரு மேதை, எடிசன்! அவர் படிக்காத மேதை! அவர் கற்றது கடுகளவு! கண்டு பிடித்தது கால் பந்தளவு! //   

Edison -4  

‘நான் ஒரு கணிதத் துறை அறிவு இல்லாதவன். ஆனால் கலைத்துவத் துறையில் சோதிக்கப் பட்டால், முதல் பத்து சதவீதத் தகுதியில் நான் உயர்வு பெற முடியும். கணித வல்லுநர்களை நான் வேலை செய்ய வைத்துக் கொள்ளலாம். ஆனால் என்னை யாரும் வேலைக்கு அமர்த்த மாட்டார்கள் ‘ என்று ஒருமுறை எடிசன் வேடிக்கையாகக் கூறி யிருக்கிறார். ‘நான் ஒரு விஞ்ஞானி அல்லன்! டாலர் வெள்ளி நாணயம் சம்பாதிக்க உழைக்கும் ஒரு வாணிபப் படைப்பாளி ‘ என்று தன்னைப் பற்றி அடுத்து ஒரு சமயம் சொல்லி யிருக்கிறார்!  

மந்த புத்தியோடு, செவிடான சிறுவன்   

தாமஸ் ஆல்வா எடிசன் 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். எடிசன் எழாவது பிறந்த கடைசிப் புதல்வன். தந்தையார் சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்கன்; தாயார் நான்சி எடிசன் ஸ்காட்டிஷ் பரம்பரையில் வந்த கனடா மாது. அவள் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. தாமஸ் எடிசனுக்கு, சிறு வயதிலேயே காது செவிடாய்ப் போனது! அப்பிறவிப் பெருங் குறை அவரது பிற்கால நடையுடைப் பழக்கங்களை மிகவும் பாதித்ததோடு, அநேகப் புதுப் படைப்புக்குக் காரணமாகவும் இருந்தது! தாத்தா ஜான் எடிசன், 1776 அமெரிக்கச் சுதந்திரப் போரில் [War of Independence] பிரிட்டாஷ் பக்கம் சேர்ந்து, நாட்டை விட்டோடிக் கனடாவில் உள்ள நோவாஸ் கோசியாவில் [Nova Scotia] சரண் புகுந்தார். பிறகு மேற்திசை நோக்கிச் சென்று, கனடாவின் அண்டரியோ மாநிலத்தில் ஈரி ஏரிக் கரையில் உள்ள பாங்கம் [Bangham on Lake Erie] என்னும் ஊரில் குடியேறினார். 1837 இல் கனடாவிலும் உள்நாட்டுக் கலகம் எழவே, ஜான் குடும்பத்தோடு மறுபடியும் அமெரிக்கா நோக்கி ஓடினார்! அங்கு ஓஹையோவில் ஈரி ஏரிக் கரையின் தென் பகுதியில் மிலான் என்னும் ஊரில் குடியேறினர்.  

Edison-2  

1840 இல் தந்தை சாமுவெல் எடிசன் மிலானில் ஒரு சாதாரண மர வியாபாரத்தைத் தொடங்கினார். அது மென்மேலும் பெருகி விருத்தி யடைந்தது. பின்பு மிஸ்சிகன் போர்ட் ஹூரனில் [Port Huron, MI] கலங்கரைத் தீபக் காப்பாளராகவும் [Lighthouse Keeper], கிராடியட் கோட்டை ராணுவத் தளத்தில் [Fort Gratiot Military Post] மரச் செதுக்கு ஊழியராகவும் சாமுவெல் வேலை பார்த்தார். தாமஸ் எடிசன், சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலில் [Scarlet Fever] கஷ்டப்பட்டுத் தாமதமாக, எட்டரை வயதில்தான் போர்ட் ஹூரன் பள்ளிக்குச் சென்றார். மூன்று மாதங்களுக்குப் பின் ஒரு நாள் தாமஸ் கண்களில் கண்ணீர் சொரிய வீட்டுக்குத் திரும்பினார். ‘மூளைக் கோளாறு உள்ளவன் ‘ என்று ஆசிரியர் திட்டியதாகத் தாயிடம் புகார் செய்தார், எடிசன்! அத்துடன் அவரது பள்ளிப் படிப்பும் முடிந்தது! பள்ளிக்கூட ஆசிரியை யான தாயிடம் மூன்று ஆண்டுகள் வீட்டிலேயே, எடிசன் கல்வி கற்றார். இதைக் கேட்டுப் பலர் ஆச்சரியப் படலாம்! புகழ் பெற்ற இத்தாலியக் கலைஞர், லியனார்டோ டவின்ஸி, அணுக்கரு அமைப்பை விளக்கிய, டேனிஷ் விஞ்ஞானி நீல்ஸ் போஹ்ர் [Niels Bohr], கணித விஞ்ஞான நிபுணர், ஸர் ஐஸக் நியூட்டன் ஆகியோரும் சிறு வயதில் மூளைத் தளர்ச்சி [Isaac Newton] உள்ளவராகப் பள்ளியில் கருதப் பட்டார்கள்! ‘எதிலும் இனி நீ உருப்படப் போவதில்லை ‘ என்று பள்ளித் தலைமை ஆசிரியர், சிறுவன் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனை நோக்கி எச்சரிக்கை செய்தாராம்! மேதை எடிசனும், அகில விஞ்ஞானி, ஐன்ஸ்டைனைப் போல் மந்த புத்திச் சிறுவனாகத்தான் பள்ளிக் கூடத்தில் காட்சி அளித்திருக்கிறார். //   

ஏழு வயதில் திடீரென எடிசனின் சிந்தனா சக்தி விரிந்து தூண்டப் பட்டது! சூழ்நிலைச் சாதனங்களின் மேல் ஆர்வம் மிகுந்து அடிப்படை ஆய்வுக் கேள்விகள் எழுந்தன. ஒன்பது வயதில் ரிச்சர்டு பார்க்கர் [Richard Parker] எழுதிய ‘இயற்கைச் சோதனை வேதம் ‘ [Natural & Experimental Philosophy] என்ற நூலைப் படித்து முடித்தார். பதிமூன்றாம் வயதில் தாமஸ் பெயின் [Thomas Paine] எழுதிய ஆக்க நூல்களையும், சிரமத்துடன் ஐஸக் நியூட்டன் இயற்றிய ‘கோட்பாடு ‘ [Principia] என்னும் நூலையும் ஆழ்ந்து படித்தார். தனது 21 ஆம் வயதில், மைகேல் ஃபாரடேயின் [Micheal Faraday] செய்தித்தாளில் இருந்த ‘மின்சக்தியின் பயிற்சி ஆராய்ச்சிகள் ‘ [Experimental Researches in Electricity] பகுதியை ஒருவரி விடாது ஆழ்ந்து படித்து முடித்தார். அந்த ஞானம் அவரது வாழ்க்கையில் ஒரு பெருத்த மாறுதலை உண்டாக்கியது! செய்கை முறையில், சோதனைகள் புரிந்து படைக்கும் திறனை எடிசனுக்கு அவை அடிப்படை ஆக்கின. கணிதப் படிப்பில் லாத எடிசன், விஞ்ஞான இயற்பாடு [Theory] எதுவும் முறையாகக் கற்காத எடிசன், சோதனைகள் மூலம் மட்டிலுமே திரும்பத் திரும்ப முயன்று, ஞான யுக்தியால் பல அரிய நூதனச் சாதனங்களைப் படைத்து உலகப் புகழ் பெற்றார்.  

Edison -3  

தானாக இயங்கும் தந்திக்குறிப் பதிவுக் கருவி   

1859 இல் எடிசன் தன் பன்னிரண்டாம் வயதில் பள்ளிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு, டெட்ராய்ட்-போர்ட் ஹூரன் [Detriot-Port Huron], ரயில் பாதையில் செய்தித் தாள் விற்கும் பையனாக வேலையில் சேர்ந்தார். அப்போது டெட்ராய்ட் சென்ட்ரல் நிலையம், தந்திப் பதிவு ஏற்பாடு மூலம், ரயில் போக்கு வரத்தைக் கண்காணிக்க முயன்று கொண்டிருந்தது. அந்த வாய்ப்பைப் பற்றிக் கொண்டு, வேலைக்கு மனுப் போட்டு, 1863 இல் டெலகிராஃப் பயிற்சியில் நுழைந்தார். தந்திச் செய்திகள் புள்ளிக் கோடுகளாகப் [Dots & Dashes] பதிவானதால், அவரது செவிட்டுத் தன்மை வேலையை எந்த விதத்திலேயும் பாதிக்கவில்லை! பதிவானப் புள்ளிக் கோடுகளை அந்த காலத்தில் ஒருவர் படித்துப் புரிந்துதான், ஆங்கி லத்தில் மாற்றிக் கையால் எழுத வேண்டும். அதே பணியை ஆறு வருடங்கள் எடிசன் அமெரிக்காவில் தெற்கு, நடுமேற்குப் பகுதிகளில், நியூ இங்கிலாந்தில், மற்றும் கனடாவில் செய்து வந்தார். அப்போது தான் வேலையைச் சீக்கிரம் செய்ய, தந்திக் கருவியைச் செப்பனிட்டு தன் முதல் ஆக்கத் திறமைக் காட்டினார், எடிசன். 1869 இல் தன் 22 ஆம் வயதில் ‘இரட்டைத் தந்தி அடிப்புச் சாதனத்தைப் ‘ [Duplex Telegraph with Printer] பதிவுக் கருவியுடன் இணைத்து, இரண்டு செய்திகளை ஒரே சமயத்தில், ஒரே கம்பியில் அனுப்பிக் காட்டினார், எடிசன். அத்துடன் தந்தியின் மின்குறிகளைச் சுயமாக மாற்றிச் சொற்களாய்ப் பதிவு செய்யவும் அமைத்துக் காட்டினார் . //   

எடிசன் தந்தி வேலையை விட்டுவிட்டு, முழு நேர ஆக்கப் பணிக்கு, நியூ யார்க் நகருக்குச் சென்றார். அங்கு ஃபிராங்க் போப்புடன் [Frank Pope] கூட்டாகச் சேர்ந்து, ‘எடிசன் அகிலப் பதிப்பி ‘ [Edison Universal Stock Printer], மற்றும் வேறு பதிக்கும் சாதனங்களையும் படைத்தார். 1870-1875 ஆண்டுகளில் நியூ ஜெர்ஸி நியூ ஆர்க், வெஸ்ட்டர்ன் யூனியனில் [Western Union] சுயமாய் இயங்கும் தந்தி [Automatic Telegraph] ஏற்பாட்டைச் செப்பனிட்டார். ரசாயன இயக்கத்தில் ஓடிய அந்தக் கருவி ஏற்பாடு, மின்குறி அனுப்புதலை [Electrical Transmission] மிகவும் விபத்துக்குள் ளாக்கியது. அதைச் சீர்ப்படுத்த முற்பட்ட எடிசன் தன், ரசாயன ஞானத்தை உயர்த்த வேண்டிய தாயிற்று. அந்த ஆராய்ச்சி விளைவில், மின்சாரப் பேனா [Electric Pen], பிரதி எடுப்பி [Mimeograph] போன்ற சாதனங்கள் உருவாகின. மேலும் அந்த அனுபவம், எடிசன் எதிர்பாரதவாறு கிராமஃபோனைக் [Phonograph] கண்டுபிடிக்கவும் ஏதுவாயிற்று.  

Edison -1  

முதல் கிராமஃபோன் கண்டுபிடிப்பு   

புதிய சாதனங்களைக் கண்டு பிடிக்கும் போது, வேறு பல அரிய உபசாதனங்களும் இடையில் தோன்றின. அவற்றுள் ஒன்று ‘கரி அனுப்பி ‘ [Carbon Transmitter] என்னும் சாதனம். 1877 இல் எதிர்பாரதவாறு, எடிசன் கண்டு பிடித்தவற்றிலே, மிக நூதன முன்னோடிச் சாதனம், கிராமஃபோன். பிரான்சின் ஆக்க மேதை, லியான் ஸ்காட் [Leon Scott] ‘ஒவ்வொரு ஒலியையும் ஒரு தகடு மீது பதிவு செய்ய முடிந்தால், அவை சுருக்கெழுத்து போல் தனித்துவ உருவில் அமையும் ‘ என்ற கோட்பாடை ஒரு நூலில் எழுதி யிருந்தார். அதுதான் ஒலி மின்வடிவாய் எழுதும், ஒலிவரைவு [Phonography] எனப்படுவது. அக் கோட்பாடை நிரூபித்துக் காட்ட, எடிசன் ஓர் ஊசியைத் தன் கரியனுப்பியுடன் சேர்த்து, ஒலிச் சுவடுகள் பாரஃபின் [Paraffin] தாளில் பதியுமாறு செய்தார். அவர் வியக்கும்படி, ஒலிச் சுவடுகள் கண்ணுக்குத் தெரியாத வடிவில், தலை எழுத்துப் போல் கிறுக்கப் பட்டு நுணுக்க மாகத் தாளில் வரையப் பட்டிருந்தன. பிறகு ஊசியை ஒலிச் சுவடின் மீது உரசி, அதைப் ஒலிபெருக்கி மூலம் கேட்டதில், பதியப் பட்ட ஓசை மீண்டும் காதில் ஒலித்தது! //   

எடிசன் அடுத்து ஓர் உருளை [Cylinder] மீது தகரத் தாளைச் [Tin Foil] சுற்றி ஒலிச் சுவடைப் பதிவு செய்து காட்டினார். 1877 டிசம்பரில் அதற்கு எடிசன், தகரத்தாள் கிராமஃபோன் [Tinfoil Phonograph] என்னும் பெயரிட்டார். ஆனால் கிராமஃபோன் ஆய்வுக் கூடத்திலிருந்து வர்த்தகத் துறைக்கு வர இன்னும் பத்தாண்டுகள் ஆயின.  

மின்குமிழி [Electric Bulb] மின்சக்தி ஜனனி [Generator] கண்டுபிடிப்பு  

எடிசன் காலத்தில் வாயு விளக்குகள்தான் [Gas Light] வீதிக் கம்பங்களில் பயன் படுத்தப்பட்டன. ஐம்பது ஆண்டுகளாக ‘மின்சார விளக்கு ‘ பலருக்குக் கனவாகவும், முயலும் படைப்பாளி எஞ்சினியர்களுக்குப் படு தோல்வியாகவும் இருந்து வந்தது! அப்போதுதான் விஞ்ஞானிகள் ‘மின்வீச்சு விளக்கு ‘ [Electric Arc Lighting] சம்பந்தமாக பலவித ஆய்வுகள் செய்து வந்த காலம். 1878 ஜூலை மாதம் 29 ஆம் தேதி சூரிய கிரகணத்தின் போது, ராக்கி மலைத்தொடர் மீது சில ஆராய்ச்சிகள் செய்ய பல அமெரிக்க விஞ்ஞானிகள் சென்றிருந்தனர். கிரகணத்தின் போது ‘சூரிய வெளிக்கனல் ‘ [Sun ‘s Corona] எழுப்பிய வெப்ப உஷ்ண வேறுபாட்டை அளக்க, அவர்களுக்கு ஒரு கருவி தேவையானது. எடிசன் ஒரு கரிப் பொட்டுச் [Carbon Button] சாதனத்தைப் பயன் படுத்தி ‘நுண்ணுனர் மானி ‘ [Microtasi meter] என்னும் கருவியைச் செய்து கொடுத்தார். அக்கருவி மூலம் கம்பியில் ஓடும் மின்னோட்டத்தைக் கட்டுப் படுத்தலாம். அம்முறையைப் பயன் படுத்தி மின்சார விளக்கு ஒன்றைத் தயாரிக்க அப்போது எடிசனுக்கு ஓர் ஆர்வம் உண்டானது.  

எடிசன் மின்விளக்கு ஆராய்ச்சிக்கு, ‘எடிசன் மின்சார விளக்குக் கம்பெனியை ‘ [Edison Electric Light Company] துவங்கிய ஜெ.பி. மார்கன் குழுவினர் முன் பணமாக $ 30,000 தொகையை அளித்தார்கள். 1878 டிசம்பரில், பிரின்ஸ்டன் பல்கலைக் கழக எம்.ஏ. விஞ்ஞானப் பட்டதாரி, 26 வயதான ஃபிரான்சிஸ் அப்டன் [Francis Upton] எடிசன் ஆய்வுக் குழுவில் சேர்ந்தார். எடிசனுக்குத் தெரியாத கணித, பெளதிக அறிவியல் நுணுக்கங்கள் யாவும், இளைஞர் ஃபிரான்சிஸ் மூலம் கிடைத்தது. மின்தடை [Resistance] மிகுதியாய் உள்ள உலோகக் கம்பி ஒன்றை மின்விளக்கிற்கு எடிசன் முதலில் உபயோகித்தார். மின்சார அணிச் சுற்றில் [Series Circuit] செல்லும் மின்னோட்டம் [Electric Current] மிகுதியாக இருந்ததால், மின் வீச்சு விளக்கு [Eletric Arc Light] ஒன்றில் பழுது ஏற்பட்டால், எல்லா விளக்கு களும் அணைந்து போயின. எடிசன் மின் விளக்குகளை இணைச் சுற்றில் [Parallel Circuit] பிணைத்து, மின்னோட்ட அளவைக் குறைத்ததால், ஒரு விளக்கில் ஏற்படும் பழுது மற்ற விளக்குகளைப் பாதிக்க வில்லை. எடிசன் குழுவினர், பிளாடினம் கம்பியைச் சுருளைச் [Platinum Filament] சூன்யக் குமிழி [Vacuum Bulb] ஒன்றில் உபயோகித்துக், கட்டுப் படுத்திய மின்னோட்டத்தில் ஒளிர வைத்து, முதல் மின்விளக்கை உண்டாக்கிக் காட்டினார்கள். //   

இதற்கு இடையில் 1879 இல் எடிசன், அப்டன் இருவரும் முதல் மின்சார ஜனனியை உண்டாக்க போதிய சோதனைகள் செய்து முடித்தார்கள். யந்திர சக்தியில் ஓட்டினால் ஜனனியில் மின்னழுத்தம் [Voltage] உண்டாகி, கம்ப்ி முனையில் மின்திறம் [Electric Power] கிடைக்கிறது. எதிர்மறையாக ஜனனியின் முனைகளில், மின்னழுத்தம் செலுத்தினால், அதே சாதனம் யந்திர சக்தியைத் தரும் மின்சார மோட்டார் [Electric Motor] ஆனதை எடிசன் நிரூபித்துக் காட்டினார். இதுவும் அவரது முதல் சாதனையே!  

1881 ஜனவரியில் முதல் ‘விளக்கொளி மின்சார அமைப்பு ‘ [Incadescent Electric Power System] வர்த்தகத் துறை ஏற்பாடு, நியூ யார்க் ‘ஹிந்த் & கெட்சம் ‘ [Hind & Ketcham] அச்சக மாளிகையில் நிர்மாணிக்குப் பட்டது. நியூ யார்க் கீழ் மன்ஹாட்டனில் அமைந்த, உலகின் முதல் வர்த்தக ‘மத்திய மின்சார ஏற்பாடு ‘ [Central Power System], எடிசன் நேரடிப் பார்வையில் நிறுவப் பட்டது! அது 1882 செப்டம்பர் முதல் இயங்க ஆரம்ப்ித்தது. அந்த மின்விளக்கு அமைப்பு வளர்ச்சி அடைந்து, பின் பெரிய ஹோட்டல்கள், அரங்க மேடைகள், வாணிபத் துறைகள், வர்த்தகக் கடைகள் யாவற்றிலும் மின்குமிழி ஒளி வீச, ஆக்க மேதை எடிசனின் புகழ் உலகெங்கும் பரவியது.  

விளக்கு எரியும் போது, சூனியமான மின்குமிழிச் [Vacuum Bulb] சுருள் கம்பியின் நேர்முனையில் [Positive Pole] ஒருவித நீல நிறவொளி [Blue Glow] சூழ்ந்து கொண்டிருந்தது. 1883 இல் எடிசன் மின்குமிழியைப் பதிவு செய்த போது, அந் நிகழ்ச்சிக்கு ‘எடிசன் விளைவு ‘ [Edison Effect] என்று பெயர் கொடுத்தனர். பதினைந்து ஆண்டுகள் கழித்து 1998 இல் ஜே. ஜே. தாம்ஸன் [J.J. Thomson] முதன் முதல் ‘எதிர்த்துகள் ‘ [Electron] பரமாணுவைக் கண்டுபிடித்தார். விஞ்ஞானிகள் பின்னால் எடிசன் விளைவுக்கு விளக்கம் தந்தனர். அதாவது எதிர்த்துகள் [Electrons] சூடான முனையிலிருந்து தண்மையான முனைக்கு [Cold Electrode], வெப்பவியல் வீச்சால் [Thermionic Emission] பயணமாகும் போது, நேர்முனையில் அப்படி ஒரு நீல நிறவொளி எழுகிறது! அதுவே பின்னால் ‘எதிர்த்துகள் குமிழி ‘ [Electron Tube] தோன்ற வழி வகுத்து ‘மின்னியல் தொழிற் துறைக்கு ‘ [Electronics Industry] அடிகோலியது.  

திரைப்படக் காமிரா [Movie Camera] கண்டுபிடிப்பு   

// போனோகிராஃபில் வெற்றி பெற்ற எடிசன், அடுத்து மூவிக் காமிரா வளர்ச்சியில் ஆழ்ந்து வேலை செய்தார். அதைப் பற்றி ஒரு சமயம் எடிசன் கூறியது: ‘கற்பனையில் எனக்கு இது முன்பே உதயமானதுதான். போனோகிராஃப் எப்படிக் காதுக்கு இசை விருந்தளிக்கிறதோ, அது போல் ‘நகரும் படம் ‘ [Movie] மனிதர் கண்ணுக்கு விருந்தளிக்கச் செய்ய முடியும். போனோகிராஃப் ஒலி நுணுக்கத்தை மூவிக் காமிரா யந்திரத்துடன் இணைத்துப் ‘பேசும் படம் ‘ [Talkies] என்னால் தயாரிக்க முடியும் ‘ இந்த சிந்தனா யுக்தி எடிசனுக்கு பத்தாண்டுகளாக இருந்திருக்கிறது. 1880 இல் முதல் நகரும் படம் வெளிவரப் பொறுப்பாக இருந்தவர், எடிசனுக்கு உதவியாளராகச் சேர்ந்த, W.K.L. டிக்ஸன் [W.K.L. Dickson]. எடிசன் நகரும் படக் காமிராவை விருத்தி செய்ய, பலரது படைப்பு களைக் களவு செய்தார். தன் கீழ் பணியாற்றும் நிபுணர்களின் ஆக்கங்களையும் பயன் படுத்திக் கொண்டார்.  

1888 இல் எடிசன் முதலில் படைத்த மூவிக் காமிரா, கினெட்டாஸ்கோப் [Kinetoscope].  ஆனால் படம் யாவும் அதில் சற்று மங்கலாகத்தான் தெரிந்தன. 1889 இல் பிரிட்டனில் வாழ்ந்த ஃபிரீஸ்-கிரீன் [Friese-Green] ஒருவிதப் பதிவு நாடாவைப் [Sensitized Ribbon] பயன் படுத்தி உருவப் படங்களைப் பதித்தார். அதே நாடாவை சில வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் ஜார்ஜ் ஈஸ்ட்மன் [George Eastman] உபயோகித்து ஓளிப் படங்களை அந்த நாடாவிலே எடுக்கும்படி செய்தார். முதல் முறையாக, எடிசன் கினெடாஸ்கோப் காமிராவை விருத்தி செய்து, ஐம்பது அடி நீளமுள்ள படச் சுருளை, மின்சார மோட்டார் மூலம் சுற்ற வைத்து, உருப்பெருக்கியின் [Magnifying Glass] வழியாகப் பேசும் படங்களை வெள்ளித் திரையில் காட்டிக் களிக்கச் செய்தார். அந்த மூவிக் காமிராவை எடிசன் 1891 இல் அமெரிக்காவில் பதிவு செய்தார்.  

‘ஒளியையும், ஒலியையும் இணைத்துப் பேசும் படத்தைத் திரையில் காட்டிச் சிறுவர், சிறுமிகளுக்குச் சிறந்த முறையில் பாடம் சொல்லிக் கொடுக்கலாம் ‘, என்னும் கருத்தில் உறுதியான நம்பிக்கை காட்டினார் எடிசன். ‘கல்வி புகட்டுவதில் எந்த அங்கம் முக்கிய மானது ? கண்களா ? அன்றி காதுகளா ? ‘ என்று ஒருவர் கேட்ட போது, எடிசன் கூறினார்: ‘கண்கள்தான்! ஓலியை விட, ஒளி அதி வேகம் உடையது. காதுகளை விடக் கண்கள் விரைவாகக் கற்பவை! நகரும் படங்கள் மூலம், கண்கள் கற்றுக் கொள்வது நேரடி வழி! விரைவுப் பாதை! தெளிவாய் விளக்கும் பாதை! புத்தகத்தில் சொற்களைப் படித்து அறிவதை விட, பார்வை மூலம் படிப்பது எளியது! ‘ ‘ஒரு படம் ஆயிரம் சொற்க ளுக்குச் சமம் ‘ என்பதை எடிசன் எத்தனை அழகாகச் சொல்லி விட்டார்! ஒரு நிலைப் படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம் என்றால், ஓடும் படம் எத்தனை ஆயிரம் சொற்களுக்கு இணையாகும், என்பதைக் கணக்கிட முடியுமா ? //   

Cover image  

அமெரிக்க ஒளி விளக்கு அணைந்தது   

ஆக்க மேதை எடிசன் தன் 84 ஆம் வயதில், 1931 அக்டோபர் 18 ஆம் தேதி நியூ ஜெர்சி வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார். அமெரிக்க ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர் [President Herbert Hoover] எடிசன் உடல் அடக்கத்தின் போது அமெரிக்கா வெங்கும் தேவையான விளக்குகளைத் தவிர, மற்ற மின்விளக்குகளை, ஒரு நிமிடம் அணைக்கும்படி ஆணையிட்டிருந்தார். அக்டோபர் 21 ஆம் தேதி மாலை 9:59 [EST] மணிக்கு அவரது புகழுடல் அடக்க மானது. நியூ யார்க்கில் மாலை 9:59 [EST] மணிக்கு ‘விடுதலை விக்கிரகத்தின் ‘ [Statue of Liberty] கையில் இருந்த தீப்பந்தம் ஒளி இழந்தது! பிராட்வே விளக்குகள் ஒளி மங்கின! வீதியில் பயணப் போக்கு [Traffic Signals] விளக்குகளைத் தவிர மற்ற எல்லா விளக்குகளும் கண்ணை மூடின! சிகாகோவில் சரியாக 8:59 மணிக்கு வீதியில் மின்சார வண்டிகள் [Street Cars] ஒரு நிமிடம் நின்றன! மின்விளக்குகள் அணைந்தன! டென்வரில் 7:59 P.M மலை நேரத்தில் விளக்குகள் ஒரு நிமிடம் கண்ணை மூடி அஞ்சலி செய்தன! கிழக்கே எடிசன் உடல் அடக்கமான சமயத்தில், மேற்கே காலிஃபோர்னியாவில் பசிஃபிக் நேரம் 6:59 P.M. மணிக்கு, சூரியனும் செவ்வானில் தன் ஒளியைக் குறைத்து இருட்கடலில் மூழ்கியது! விளக்குகளும் ஒரு நிமிடம் இமை மூடின! ஆனால் எடிசன் ஆத்மா வாகிய மின்விளக்கு இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் சுடர் விட்டு, அகில உலகுக்கும் ஒளி பாய்ச்சிக் கொண்டே இருக்கும்!