மின்சாரத் தட்டுப்பாடு:​ சில கவலைகள்

ஒரு வழியாக 2 மணி நேர மின் தடை,​​ வளர்ந்து (ஒளிர்ந்து!)​ மார்ச் 28-ம்
தேதியிலிருந்து 3 மணி நேரமாகிவிட்டது.​ மின் வாரிய அறிவிப்பு 29-ம்
தேதியிலிருந்துதான்.

 ஏறத்தாழ 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த 2 மணி நேர மின்
தடை மக்களுக்கு இயல்பாகிவிட்டதைப்போல,​​ கொஞ்சநாள்களில் 3 மணி நேர மின்
தடையும் இயல்பாகிவிடத்தான் போகிறது.​ அதனால் ஏற்படும் தொழில்ரீதியான
சிக்கல்களுக்கு மானியம்,​​ தள்ளுபடி,​​ உடல் அவதிகளுக்கு மருந்துகளும்
வரலாம்,​​ காத்திருப்போம்.

 அரசுத் தரப்பிலிருந்து மெகாவாட்,​​ மில்லியன் யூனிட்,​​ பற்றாக்குறை,
 மத்தியத் தொகுப்பு,​​ காற்றாலைகள்,​​ பருவமழை பொய்ப்பு என ஏராளமான
சொற்பதங்கள் கணக்கீடுகளுடன் உமிழப்படுகின்றன.

 ஆனால்,​​ இவையெதுவும் சாதாரண மக்களுக்குத் தேவையில்லை.​ இந்த
ஆய்வுகள் அரசுக்கும்,​​ அதிகாரிகளுக்கும்,​​ ஆய்வாளர்களுக்கும்தான் தேவை.
 அவற்றைக் கொண்டு சரிசெய்யப் போகிறவர்கள் அவர்கள்தான்.​ ‘ஜனநாயக
நாட்டில்’ வெளிப்படையாக அறிவிக்கிறோம் என்ற பெயரில் ஒரு வகையான
குழப்பத்தைத்தான் இந்த சொற்பதங்களும்,​​ கணக்கீடுகளும் செய்கின்றன.

 இரண்டே விஷயங்கள்தான் இப்போது உயர்ந்து உயிரை எடுக்கும் மின் தடையின்
அம்சங்கள்.​ முதலாவது,​​ மக்கள் தொகைப் பெருக்கம்-​ மக்களின் தேவைப்
பெருக்கம்.​ இரண்டாவது,​​ இந்தப் பெருக்கங்களுக்குத் தக்கவாறு மின்சாரம்
உற்பத்தி செய்யப்படவில்லை-​ அல்லது உற்பத்தி செய்ய முடியவில்லை என்பது.

 தட்டுப்பாடு என்ற சொல்லே எப்போதாவது பிரயோகிக்கப்பட்டு வந்த ஒன்றாக
இருந்து,​​ சமீபகாலமாக எல்லா துறைகளிலும் நுழைந்துவிட்டது.​ மக்கள்தொகைப்
பெருக்கத்துக்கேற்ப அதிகரித்து வரும் தொழிற்சாலைகள்,​​ மருத்துவமனைகள்,
அலுவலகங்கள்…​ அவற்றுக்கான மின்சாரத்துக்கு இன்று தட்டுப்பாடு.

 சோம்பேறிகளை உருவாக்கிவரும் நுகர்வுக் கலாசாரத்தால் இப்போது
பெரும்பாலான வீடுகளிலும் மின்சாதனங்கள் துணி துவைக்கும் இயந்திரம்,
குளிர்சாதனப் பெட்டி எனப் பெருகிவிட்டிருக்கின்றன.​ ஆள்வோரின் அரசியல்
தேவைக்காக வீடுகள்தோறும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்.
இவையெல்லாமும் மின்சாரத் தட்டுப்பாட்டுக்குக் காரணங்கள்.​  மரபுசாரா
எரிசக்தி பயன்பாடு,​​ சூரிய சக்தி விளக்குகள்,​​ அடுப்பு போன்ற மின்
சிக்கனத்துக்கான அறிவிப்புகள் எல்லாம் நடைமுறைச் சாத்தியமுள்ளவையா என்ற
கேள்வியும் எழுந்திருக்கிறது.

 இப்போது ‘புளோரோசென்ட்’ பல்புகள்தான் மின்சாரத்தைக் குறைவாகப்
பயன்படுத்தும் என்று அதிக விற்பனையை எட்டியிருக்கின்றன.​ ஆனால்,​​ இந்த
வகை பல்புகளால் சுற்றுச்சூழலுக்குப் பெரும்கேடு காத்திருக்கிறது என்ற
எச்சரிக்கையும் நம்மை அச்சமுறச் செய்கின்றன.

 அடுத்ததுதான்,​​ மின் உற்பத்தி.​ தேவைக்கேற்ப தொலைநோக்குத்
திட்டங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் செயல்படுத்தப்படவில்லை
என்பதுதான் வலுவான குற்றச்சாட்டு.

அடுத்த சில பத்தாண்டுகளுக்குத் தேவையான மின் உற்பத்திக்கு இப்போதாவது
நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்விக்கான பதிலும்
கிடைக்கவில்லை.

 தமிழ்நாட்டில் 2012-ல் ஏறத்தாழ 5,900 மெகாவாட் கூடுதல் மின்
உற்பத்திக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பிலும்
சந்தேகமே எழுகிறது.​ ஏனென்றால்,​​ நாடு தழுவிய அளவில் மின் உற்பத்திச்
சாதனங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன.

 அப்படியானால்,​​ என்னதான் தீர்வு என்று கேள்வி கேட்கும் நிலையிலும்
எவரும் இல்லை.​ தள்ளுபடிகளுக்குள்ளும்,​​ இலவசங்களுக்குள்ளும்,
மானியங்களுக்குள்ளும்,​​ சலுகைகளுக்குள்ளும் மக்கள்
மூழ்கடிக்கப்பட்டுள்ளனர்.

 நிரந்தரத் தீர்வு என்ற சொற்றொடர் மறைந்துபோய்விட்டது,​​ குறைந்தபட்சம்
நீண்டகாலத் தீர்வாவது இருக்கிறதா என்றும் தெரியவில்லை.

 ஒருபுறம் மின் சிக்கனத்துக்கான வழிமுறைகள்,​​ விழிப்புணர்வு
ஏற்படுத்தப்படுவதுடன்,​​ மறுபுறம் தொலைநோக்குத் திட்டங்களை வகுக்கவும்
அரசு முயல வேண்டும்.​ இவை இரண்டையும் சமவேகத்தில் செய்யாமல் போனால்,
அடுத்த ஆண்டு இந்த மின் தடை நேரம் 4 மணி நேரத்தையும் தாண்டலாம்.

 ஏனென்றால்,​​ மின் தட்டுப்பாடு தவிர்க்க முடியாது என்பதுடன்,
இப்போதுள்ள மின் தட்டுப்பாடு இன்னும் பல மடங்கு அதிகரிக்கப் போகிறது
என்பதும் உண்மை.

 மக்களுக்கான பொறுப்புணர்வுகளை மட்டும் கூறிக் கொண்டு,​​ திட்டங்களை
வகுக்காமல் இருக்கும் அரசும் குற்றவாளி.​ திட்டங்களை வகுக்க
வேண்டியதுதானேஎன்று குறைகூறிக் கொண்டே பொறுப்புணர்வுகளை மறந்துவிடும்
மக்களும் குற்றவாளி.

 இதைப் பற்றியெல்லாம் அரசியல்வாதிகளுக்குக் கவலையில்லை.​ அடுத்த
பொதுத் தேர்தல் எப்படியிருக்கும்,​​ எப்படியிருக்க வேண்டும் என்பது
அவர்களுக்கான பிரதான கவலை.​ மின் தடை பெரிய பிரச்னையை ஏற்படுத்தினால்,
அதற்காக மக்களுக்குக் கூடுதல் தொகையைப் பங்களிக்க வேண்டியிருக்கும்
அவ்வளவுதானே?

 மின் தடையால் ஏதாவது சலுகைகள் கிட்டுமா?​ தேர்தலின்போது தவறாமல் நம்
வீட்டுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்பட வேண்டுமே!​ இவை மக்களுக்கான
கவலைகள்.​ இந்தக் கவலைகள் மாறாமல் மாற்றம் சாத்தியமில்லை

Advertisements

இலவச ‘சூரிய’ மின் சக்தி : தயாராகுமா தமிழகம்-

இயற்கை இலவசமாக வழங்கும் அபரிமிதமான சூரிய ஒளி எரிசக்தியைப்
பயன்படுத்திக்கொள்ள, மத்திய மற்றும் மாநில அரசுகள், அடிப்படையாக உள்ள
பிரச்னைகளைகளைய வேண்டும் என்று தடையில்லா மின்சாரம் பெற விரும்புவோர்
தெரிவிக்கின்றனர்.

நேஷனல் சோலார் மிஷன் : கடந்த ஆண்டு, நவம்பரில், ஜவகர்லால் நேரு நேஷனல்
சோலார் மிஷன் திட்டத்தை, பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைத்தார்.
இத்திட்டம், மூன்று கட்டமாக அமல் செய்யப்படும். முதல் கட்டமாக, 2010 –
2013 ஆண்டுகளில் 1000 மெ.வா., மின் உற்பத்தி செய்ய இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த இலக்கில், தமிழகம் தனக்குரிய பங்கினை பெற,
சூரியஒளி மின் உற்பத்தியில் முதலீடு செய்ய விரும்பு வோருக்கு, தடையாக
உள்ள அம்சங்களை நீக்க தமிழக அரசு முன் வர வேண்டும். ஜவகர்லால் நேரு
நேஷனல் சோலார் மிஷன் கொள்கையின்படி, தேசிய அனல் மின் உற்பத்தி கழக,
வியாபார அங்கமான என்.வி.வி.என்., (என்.பி.டி.சி., வித்யூத் வியாபார்
நிகாம் லிமிடெட்) எனும் அமைப்புதான் தற்போது, சூரிய ஒளி மின் உற்பத்தியை
விலை கொடுத்து வாங்கவும், அதை மாநில அரசுகளுக்கு, விற்கவும் உள்ள
அதிகாரப்பூர்வ ஏஜன்சியாக செயல் படுகிறது.

இந்த அமைப்புதான், சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்களின் தகுதிகளை முடிவு
செய்து, அவர்களிடம், 25 ஆண்டு மின்சாரம் பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் செய்து
கொள்ளும். அத்துடன், மின் உற்பத்திக்கு ஏற்ப பணத்தையும் நேரடியாக
வழங்கும்.தற்போது, மாநிலங்களில் உள்ள, மின் உற்பத்தி தொடர்பான எந்த
துறைக்கும், நேஷனல் சோலார் மிஷன் திட்டத்தில் உள்ள பங்கு
தெரிவிக்கப்படவில்லை.சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை
தனியாரிடம் பெற்றுக் கொள்ளும் என்.வி.வி.என்., அதை தன்னிடம் உள்ள,
ஒதுக்கப்படாத அனல் மின்சார தொகுப்பிலிருந்து மின்சாரத்தை இணைத்து,
ஒவ்வொரு மாநிலத்துக்கும், ஒரு யூனிட்டுக்கு 5.50 ரூபாய் விலையில்
வினியோகிக்க திட்டமிட்டுள்ளது. 5.50 ரூபாய்க்கு ஒரு யூனிட் மின்சாரம்
பெற்றுக் கொள்வது எளிதானது என்பதால், மாநில அரசுகள் மின்சாரத்தைப்
பெற்றுக் கொள்வதில் கண்டிப்பாக ஆர்வம் காட்டும்.

3 சதவீத கட்டாயம் : ஒவ்வொரு மாநிலமும், அம் மாநிலங்கள் பயன்படுத்தும்
மின்சாரத்தின் மொத்த அளவில் மரபு சாரா மின் சக்தியை குறிப்பிட்ட சதவீதம்
பயன்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே மாநில அரசுகளுடன் மத்திய மின்சார
ஒழுங்கு முறை கமிஷன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு ஆர்.பி.ஓ.,
(ரெனியூவல் பர்ச்சேஸ் ஆப்ளிகேஷன்) என்று பெயர்.தமிழகத்தில் ஏற்கனவே,
4,500 மெ.வா., மின்சாரம், காற்றாலை மூலம் கிடைப்பதால், நிர்ணயிக்கப்பட்ட
ஆர்.பி.ஓ., எளிதாக பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.ஆனால் இந்நிலை
இனிமேலும் தொடராது. நேஷனல் சோலார் மிஷன் திட்டத்தின்படி 2010ல், ஒவ்வொரு
மாநிலமும், தான் பயன்படுத்தும், மொத்த மின்சாரத்தில், 0.25 சதவீதம் சூரிய
ஒளி மின்சாரமாக ஆக இருப்பது கட்டாய மாக்கப்பட்டுள்ளது. அதுவும், ஒவ்வொரு
ஆண்டும் 0.25 சதவீதம் அதிகரித்து, 2022ல் மொத்த மின்சாரப் பயன்பாட்டில் 3
சதவீத அளவுக்கு சூரிய ஒளி மின்சாரமாக இருக்க வேண்டும் என்று ஆர்.பி.ஓ.,
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் காற்றாலை உள்ளிட்ட மற்ற மரபுசாரா மின் உற்பத்தி கணக்கில்
வராது.தமிழக அரசின், தற்போதைய மின் பயன்பாட்டின்படி, குறைந்தது 50
மெ.வா., மின்சாரமாவது 2010ல் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் ஏற்கனவே மூன்று இடங்களில் அனல் மின்நிலையங்களின் விரிவாக்கப்
பணிகள், நடைபெற்று வருகின்றன. அவற்றையும் சேர்த்தால் 2011ல் மேலும் 50
மெ.வா., மின்சாரம் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயம்
எழுந்துள்ளது. ஆர்.பி.ஓ., வரையறையின்படி சூரிய ஒளி மின் உற்பத்தியை மாநில
அரசுகள் செய்யாவிட்டால், மத்திய அரசு எந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கும்
என்பது கேள்விக்குறியே. எனினும், மத்திய அரசின் சலுகைகள் பறிபோகும்
வாய்ப்புகளை மறுக்க முடியாது.

கோபன்ஹேகன் சுற்றுச்சூழல் மாநாட்டில் தனி ஆவர்த்தனம் பாடிவிட்டு வந்துள்ள
இந்தியா, சில கட்டுப் பாடுகளை, உறுதியாக எடுக்க வாக்குறுதி
கொடுத்திருக்கிறது. அதன்படி 2020ம் ஆண்டில், ஒவ்வொரு மாநிலமும் மொத்த
மின்சார பயன்பாட்டில் 3 சதவீதம் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்பட்டதாக
இருக்க வேண்டும். நேஷனல் சோலார் மிஷன் திட்டத்தின் படி, சூரிய ஒளி மின்
உற்பத்தி நிலையங்கள் அமைக்க விண்ணப்பங்கள் இன்னும் கோரப்படவில்லை.
எனினும் விண்ணப்ப தாரர்கள் தகுதி நிர்ணயித்து, என்.வி.வி.என்., பரிந்துரை
செய்துள்ளது.

அதன்படி, முதலாவதாக, சூரியஒளி மின் திட்டத்தில் உற்பத்தி செய்யும்
மின்சாரத்தை 33 கே.வி., திறன் கொண்ட மின்கிரிடுகள் மூலமாகத் தான் கொண்டு
செல்ல வேண்டும். இரண்டாவதாக, விண்ணப்பிக்கும் நிறுவனம் அல்லது அதன்
இயக்குனர்களின் மதிப்பு (நெட் வொர்த்), ஒரு மெகா வாட்டுக்கு குறைந்தது
மூன்று முதல் ஐந்து கோடி ரூபாய் கொண்டிருக்க வேண்டும்.மூன்றாவதாக,
“சோலார் போட்டோ வோல்டிக்’ முறையில் மின் உற்பத்தி செய்ய இந்தியாவில்
தயாரிக்கப்படும் பேனல் களையே உபயோகிக்க வேண்டும்.இவற்றில், முதல் மற்றும்
மூன்றாவது விதிமுறைகள் சூரிய ஒளி மின் உற்பத்தி முதலீட்டாளர்களுக்கு
முட்டுக்கட்டை களாக அமைந்துள்ளன.

தமிழக அரசு செய்யுமா?தமிழகத்தில், தூத்துக்குடி, விருதுநகர்,
ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம்
மாவட்டங்கள் தான் சூரிய ஒளி மின் உற்பத் திக்கு ஏற்ற மாவட்டங்கள் என்று
கருதப் படுகின்றன.ஒரு மெ.வா., சூரிய ஒளி மின் திட்டம் அமைக்க, குறைந்தது
4.5 ஏக்கர் தேவைப்படும். நகருக்கு வெளியே கிராமங்களில்தான் இந்த இடம்
கிடைக்கும். அங்கு தான் இட மதிப்பு குறைவாக இருப்பதால், திட்டம் வர
வாய்ப்புள்ளது. தமிழகத்தில், சில இடங்களைத் தவிர, கிராமப்பகுதியில் 33
கே.வி., திறன் கொண்ட மின் கிரிடுகளோ அல்லது அதற்கேற்ற துணை
மின்நிலையங்களோ இல்லை. இவை அதிகமாக, 11 (22/11) அல்லது 22 கே.வி.,
(110/22) துணை மின் நிலையங்களில் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன. சூரிய
ஒளியிலிருந்து மின்சாரம் பெறும் கிரிடுகளை, 110/33 கே.வி., அல்லது அதற்கு
அதிக திறன் கொண்ட துணை மின் நிலையங்களாக மாற்ற தமிழக அரசு முன் வர
வேண்டும். குறிப்பாக, சிவகங்கை மாவட்டத்தில் மேற்கூறிய திறன் கொண்ட ஒரு
துணை மின் நிலையம் கூட இல்லை. இவ்விஷயத்தை, போர்க்கால அடிப்படையில்,
செய்தால்தான் தேசிய திட்டத் தின் பயனை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள
முடியும்.

மற்ற மாநிலங்களை சேர்ந்த உயர் அதிகாரிகள், குறிப்பாக, குஜராத், கர்நாடகா
மாநிலங் களை சேர்ந்த மின் உயர் அதிகாரிகள், நேஷனல் சோலார் மிஷன்
திட்டத்தில் அதிகப் பங்குகளை கொண்டு வர டில்லியில் முயற்சி செய்து
வருகின்றனர். தமிழகத்தில் மின்துறை உயர் அதிகாரிகள் அதிக ஆர்வம்
கொண்டிருந் தாலும், தமிழக அரசு சூரிய ஒளி மின் சக்தி குறித்து, கொள்கை
ரீதியாக தெளிவான முடிவை இன்னும் எடுக்காததால், தமிழக அதிகாரிகளின் கைகள்
கட்டப்பட்டுள்ளன.காற்றாலை திட்டத்தில், பல மட்டத்தில் அதிகாரிகள் உதவி
செய்வதில்லை. காற்றாலையிலிருந்து மின்சாரத்தை கொண்டு செல்லும் கிரிடுகளை
உற்பத்தி யாளர்களே அமைக்க வேண்டும் என்றும், கட்டுமான வளர்ச்சிக் கட்டணம்
என்ற தொகையை கட்டவேண்டும் என்றும் மின் வாரியம் வலியுறுத்தி வந்தது.

இதுதொடர்பான வழக்கில் மின்சாரத் துறைக்கு சாதக மாக தீர்ப்பானது. இதன்
பலனாக, தமிழக மின் வாரியத்துக்கு 300 கோடி ரூபாய் வரை வருமானம்
கிடைத்துள்ளது. அதே போல், சூரிய ஒளி மின் உற்பத்தி யாளர்கள்,
மின்கிரிடுகள் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று மின் துறை யிலுள்ள சில
அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர். அவர்கள் மின் வாரியம் செலவு செய்ய
வேண்டாம் என்று பார்க் கிறார்களே தவிர, சூரிய ஒளி மூலம் மின்சாரம்
தயாரிக்க காற்றாலையை விட மூன்று பங்கு அதிக முதலீடு செய்ய வேண்டி யுள்ளது
என்பதை யோசிக்க மறுக்கிறார்கள். நீண்டகால முதலீடு கொண்ட இத் தொழிலில்,
நிறைய முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் எண்ணத்தில் அதிகாரிகள் திட்டமிட
வேண்டும். 365 நாட்களிலும் குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை சூரிய ஒளி மின்
திட்டங்கள் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை அவர்கள் சிந்திக்க
வேண்டும்.

அத்துடன், சூரிய ஒளி மின் திட்டங்கள் மட்டுமே, அனைத்துப்
பகுதியிலிருந்தும் மின்சாரம் தயாரிக்க முடியும் வாய்ப்பைக்
கொண்டிருக்கிறது. அனல், புனல், அணு மின் நிலையங்களை எல்லா இடத்திலும்
அமைக்க முடியாது. பரவலாக்கப்பட்ட மின் உற்பத்தித் திட்டம் சூரிய ஒளி மின்
திட்டத்தில் மட்டுமே சாத்தியம். எனவே, எதிர்காலத்தில் தமிழகத்தில்
அனைத்து பஞ்சாயத்துகளுமே, சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்து
கொள்ளும் வாய்ப் புள்ளது. அவ்வாறு அமையும் பட்சத்தில் மின்
வினியோகத்தில், உள்ள இழப்பை தவிர்க்க முடியும். தமிழகத்தில் பற்றாக்குறை
10-12 சதவீதமும், மின் வினியோக இழப்பு 18-20 சதவீதமும் உள்ளது.
காற்றாலைகளைப்போல் மின் கிரிடுகளை முதலீட்டாளர்களே அமைத்துக்
கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினால், இந்த திட்டம் ஆரம்பித்ததன் நோக்கமே
போய்விடும். அத்துடன், பிற திட்டங்களைப் போல் இத்திட்டமும்,
வெற்றியடையாமல் வெறும் காகிதத்திலேயே முடிந்துவிடும்.

சூரிய ஒளி மின்உற்பத்தியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, துணை
மின் நிலையங்களின் மின் திறனை, 33 கே.வி.,யாக திறன் உயர்த்த தமிழக அரசு
உடனடியாக, நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான்
அரசுகளைப் போல், என்.வி. வி.என் விதித்துள்ள இந்த கட்டுப்பாட்டை நீக்க
வேண்டும் என்று தமிழக அரசும் கோரிக்கை வைக்க வேண்டும்.ஏற்கனவே தமிழக மின்
துறை அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி, தமிழகத்தில் 100 மெ.வா. சூரிய ஒளி
மின் உற்பத்தியை ஆரம்பிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை
விடுத் திருந்தார். கடந்த வாரம், தமிழக அரசின் சார்பாக மின்துறை
செயலாளர், தேசிய சோலார் மிஷனில் தமிழகத்துக்கு தனி ஒதுக்கீடு வேண்டும்
என்று கடிதம் எழுதி யுள்ளார். ஆகவே சூரிய ஒளி மின் உற்பத்தி அவசியம்
என்று தமிழக அரசு கருதுகிறது. அது பாராட்டுக்குரியது. அதற்கான அடிப்படை
கட்டுமான தேவையை பூர்த்தி செய்யும் பணியிலும், காற்றாலைக்கு சில
அதிகாரிகள் போட்ட முட்டுக்கட்டை போல்இதற்கும் போடுவதை தவிர்க்கவும்,
தமிழக அரசு, முழுமூச்சில் முயற்சி செய்ய வேண்டும்.

இல்லாவிட்டால், நேஷனல் சோலார் மிஷனை விடுத்து, குஜராத் போல், தமிழக
அரசும், தங்களுக்கென்ற தனி சூரிய ஒளி மின் உற்பத்தி கொள்முதல் திட்டத்தை
வகுக்க வேண்டும். தமிழக மின்வாரியமே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.
வெண்ணெய் இருக்க, நெய்க்கு அலைந்த கதையாய், இலவசமாக கிடைக்கும், சூரிய
ஒளியை பயன்படுத் தாமல், மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய
அவதிப்படக்கூடாது. தமிழகத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும்,
தடையில்லா மின்சாரம் கிடைக்கக்கூடிய தமிழகத்தை ஒளிரச் செய்ய தமிழக
அரசும், அதிகாரிகளும் உடனே களத்தில் இறங்க வேண்டும்.

கோடைகாலம்… வரப்போகிறது தேர்தல்…:நம் வாக்காளர்கள், கடைசி நேரத்தில்
எடுக்கும் முடிவுகளால் ஆட்சியை மாற்றி விடுவார்கள் என்பது நாம் பழைய
தேர்தல் களிலிருந்து படித்த பாடம். அடுத்த ஆண்டு, தமிழக சட்டசபை தேர்தல்
கோடை காலத் தில் தான் வரப்போகிறது. அப்படியானால், மின்வெட்டின் போது,
மக்கள் ஓட்டுப் போடப்போகிறார்கள் என்பதை அரசு கவனத்தில் கொள்ள
வேண்டும்.கோடை காலத்தில் 10 ரூபாய் அதிகம் கொடுத்து, டீசல் மின்
உற்பத்தியாளர் களிடமிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் மின்சாரத்தை
வாங்கிச் சமாளித்துக் கொள்ளலாம் என்று, பழைய பாணியில் அதிகாரிகள்
அரசுக்கு யோசனை தெரிவித்து வருகின்றனர். ஆனால், அது சமயத்தில் வீடு
களுக்கு மட்டுமே மின்சாரம் வினியோகிக்க முடியும்.

தொழிற்சாலைகளுக்கு வினியோகிக்க முடியாது.கடந்த பார்லிமென்ட் தேர்தலின்
போது, தொழில் மாவட்டங்களான கரூர், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய
பகுதி களில் தி.மு.க.,வுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டது. இதை கருத்தில்
கொண்டு வர இருக்கும் தேர்தலுக்குள் பெரிய மின் திட்டத்தை கொண்டு வருவது
கடினம். எந்த ஒரு மின்திட்டத்தையும் அமைக்க குறைந்தது 5-7 ஆண்டுகள்
ஆகும். ஆனால் சூரிய ஒளி மின்திட்டத்தை மட்டுமே ஓர் ஆண்டுக்குள்
அமைத்துக்கொள்ளலாம். இத்திட்டத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்துக்கு பிற
மாநிலங்களைப்போல் தமிழகமும், 13-16 ரூபாய் வரை அளித்து 10 ஆண்டுக்கு
ஒப்பந்தம் செய்தால், ஒரு பஞ்சாயத்துக்கு 2 மெ.வா., வீதம் 600 மெ.வா.,
உற்பத்தி செய்யலாம். இல்லா விட்டால் தேர்தல் நேரத்தில் எழும் மின்
வெட்டுப் பிரச்னையின் போது, வாக்காளர் களின் கோபத்தை சந்திக்க நேரிடும்.
அண்ணா சாலையில் சட்டசபை வளாகத்தை கட்டியதாலோ, அண்ணா பல்கலை., நூலகம்
அமைத்ததையோ மக்கள் சாதனையாக ஏற்க மாட்டார்கள். அதை கடமையாகவே
கருதுவார்கள். மின் பற்றாக் குறையை உணர்ந்து, உடனடியாக நிறுவக் கூடிய
சூரிய ஒளி மின் திட்டத்துக்கு அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

எது சிக்கனம்…சிந்திக்குமா அரசு…: தமிழகத்தில் இன்னும் இரு ஆண்டு
களில், அனல் மின்நிலைய விரிவாக்கத்தில் 3 ஆயிரம் மெ.வா., மின் உற்பத்தி
செய்ய, மின் வாரிய அதிகாரிகளும் நிதித்துறை அதிகாரி களும் திட்டமிட்டு
வருவதால், சூரிய ஒளி மின் திட்டத்துக்கு உள்கட்டமைப்புக்கு செலவு செய்ய
வேண்டாம் என்று கருதுகிறார்கள்.இந்த மின் உற்பத்தியால், தமிழகத்தில் மின்
தேவையை சமாளிக்க முடியும் என்று கருதும் அவர்கள், சூரிய ஒளி மின் திட்ட
உள்கட்டமைப்புப் பணிகளை மின்சார வாரியம் செய்ய வேண்டும் என்பதை ஏற்க
மறுக்கிறார்கள்.அவர்களின் கணக்குப்படி, 4 ரூபாய்க்கு அனல் மின் நிலையம்
மூலம் ஒரு யூனிட் மின்உற்பத்தி செய்ய முடியும். ஆனால், 3 ஆயிரம் மெ.வா.,
மின்சாரத்துக்கு இதுவரை அரசு 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு
செய்திருக்கும். அதுமட்டுமல்ல, இந்த கணக்கில் வராத செலவினங்களும் உண்டு.
இம்மின்சாரத்தை கொண்டு செல்லும் பாதையில் உள்ள கிரிடு மற்றும் துணை மின்
நிலைய திறன் கூட்டுவதற்கான செலவை உற்பத்தியில் சேர்ப்பதில்லை.
இவையெல்லாம் அரசின் பட்ஜெட் செலவினங்களில் மட்டுமே வருகின்றன.

மேலும், தற்போது கிடைக்கும், நிலக்கரி, தரம் நாளுக்கு நாள் குறைந்து
கொண்டே வருகிறது. இந்தோனேஷியா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள தனியார்
சுரங் கங்கள் அதிக விலை கொடுப்பவர்களுக்கு நிலக்கரியை விற்பதால், நமக்கு
தொடர்ந்து நிலக்கரி கிடைப்பது நிச்சயம் இல்லாமல் இருக்கிறது. இதனால்
தேவைக்கு அதிகமாக, நிலக்கரியை சேமித்து வைக்க வேண்டிய நிலையில்
இருக்கிறோம். இந்த செலவினங்கள் எல்லாம் அவர்கள் உற்பத்தி செலவில்
கணக்கில் சேர்த்துப் பார்ப்பதில்லை.மேலும், தரமான நிலக்கரி இன்னும் 20
ஆண்டுகளுக்குப் பின் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. நிலைமை இவ்வாறு
இருக்க, முதலீடு செய்ய வருபவர்களை பிற மாநிலங்கள் போல், ஊக்குவிக்க
வேண்டும். அவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். தனியாரே முதலீடு
செய்து மின் உற்பத்தி செய்ய வழிவகுப் பதே எந்த புத்திசாலி அரசும்
செய்யும் பணியாகும்.

தனி வழியில் செல்லுமா தமிழகம்…:சோலார் நேஷனல் மிஷன் திட்டத்தின் படி,
தற்போது 2010-13ம் ஆண்டுக்குள் 1000 மெ.வா., சூரிய ஒளி மின் உற்பத்திக்கு
இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் 500 மெ.வா., சோலார் போட்டோ
வோல்டிக் வழியா கவும், 500 மெ.வா., சோலார் தெர்மல் வழியா கவும் உற்பத்தி
செய்ய உத்தேசிக்கப் பட்டுள்ளது.உலக அளவில்,சூரிய ஒளி மின் உற்பத்தியில்
சோலார் தெர்மல் வழி உற்பத்தி 1 சதவீதம் மட்டுமே. இதற்கு ஏன் 50 சதவீத
பகுதியை ஒதுக்கீடு செய்தார்கள் என்பது தெரியவில்லை. இதனால்தான் என்னவோ,
குஜராத் அரசு அவர்களுக்கு என்று தனியாக திட்டத்தை வகுத்துக் கொண்டார்கள்.
சூரிய ஒளி மூலம் மின் சக்தி உற்பத்தி செய்பவர்களுக்கு குஜராத் அரசு
நேரடியாக ஒப்பந்தம் செய்து 25 ஆண்டுக்கு மின்சாரம் வாங்கிக் கொள்ள
ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளது.தமிழக அரசும் இதேபோல் ஒரு திட்டத்தை
வகுத்தால்தான், இலவசமாக கிடைக்கும் சக்தியை பயன்படுத்திக் கொள்ள
முடியும்.தமிழகத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்ய முதலீட்டாளர்கள்
ஆர்வம் கொண்டுள்ளனர். தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமையில் (டெடா)
இவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். விண்ணப்பம் செய்துள்ள நிறுவனங்களில் பல
சூரிய ஒளி மின் உற்பத்தி பற்றி அறிந்திருக்கிறார்களா என்றே தெரியவில்லை.

இந்தியாவில் சூரிய ஒளி மின் உற்பத்தி துவங்கி இன்னும் 2 மாதம் கூட
ஆகவில்லை. இதன்மூலம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் உற்பத்தி செய்யமுடியுமா?
இந்தியாவில் உள்ள சூழ்நிலையில் சோலார் பேனல்கள் எத்தனை ஆண்டு உழைக்கும்.
தேய்மானத் தால் எத்தனை சதவீத உற்பத்தி இழப்பு ஏற்படும் என்பதையெல்லாம்
இந்திய சூழ்நிலையில் யாரும் அறிந்திருக்கவில்லை. இதைப்பற்றி அறியாமல்,
அரசு தருகிறது என்று இறங்கினால், கோடிக்கணக்கில் செய்யும் முதலீடு
கேள்விக்குறி ஆகிவிடும். இந்தியாவில் இந்த தொழில்நுட்பம் அனுபவம்
உள்ளவர்கள், டெக்னீசியன் உள்ளிட்டோர் விரல் விட்டு எண்ணும் அளவில்தான்
உள்ளனர். வெறும் பத்திரிகை செய்தியை நம்பி இறங்குவோருக்கு இத்துறை பெரிய
சவாலாக அமையும். புதிதாக துவங்க விரும்பும் நிறுவனங்கள் ஒரு சில ஆண்டுகள்
காத்திருந்து துவங்குவதே அறிவுப்பூர்வமான செயல்.
http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6753

ஏற்புடையதா அயல்மொழிச் சொற்கள்?

அயல்மொழிச் சொற்களை அப்படியே ஏற்கலாமா, கூடாதா என்பது பற்றிய சர்ச்சை தொடங்கி ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலமாகப் போகிறது. தூய தமிழில்தான் பேச வேண்டும் என்கிற பழ. கருப்பையா போன்றவர்கள் ஒருபக்கம். மொழி மக்களுக்குப் புரியும்படி இருப்பதற்காகத்தான் என்கிற ஈ.வே.கி.ச. இளங்கோவன் போன்றோர் இன்னொருபக்கம். திராவிடப் பாரம்பரியத்தினரே பலர் பிறமொழி கலந்து பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டு விட்டனர். ÷புதுக்கவிதை எழுதும் தமிழுணர்வுக் கவிஞர்களில் பலர் வடமொழிச் சொற்களைக் கையாள்வதுதான் சிறப்பு என்று கருதுவது வேடிக்கையாக இருக்கிறது. சிநேகம், பரிச்சயம், சுவாசம், பிரியம், ஜீவன் போன்ற வார்த்தைகளில்லாத புதுக்கவிதைகளை எண்ணிவிடலாம் போலிருக்கிறது. தமிழைச் சுவாசிக்கிறோம் என்பவர்களின் பெயர்கள் வடமொழிப் பெயர்களாக அல்லவா இருக்கிறது. சிநேகனும், விஜயும், மனுஷ்யபுத்ரனும், மாலதி மைத்ரியும், சாரு நிவேதிதாவும் தனித்தமிழ் இயக்கத்தினரின் பார்வையில் தீண்டத்தகாதவர்களாகி இருப்பார்களே? ÷தமிழில் முதல் டாக்டர் பட்டம் பெற்றவரும் சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில தமிழ் அகராதி தலைமைத் தொகுப்பாளருமான அ. சிதம்பரநாதன் செட்டியார் “சொல்லும் பொருளும்’ என்ற தலைப்பிட்ட தமது கட்டுரையில் “இன்றியமையாத இடங்களில் வழக்குப் பயிற்சி அதிகமாகிவிட்ட சொற்களை ஆளுவது குற்றம் ஆகாது. உதாரணமாக மோட்டார், ரயில், சைக்கிள், பேனா, பாங்கி ஆகிய சொற்களை அப்படியே ஆளுவதாற் பெரிய குற்றம் வாராது. அவை தமிழே போல் அமைந்து தமிழ் மொழியிலே இக்காலத்திற் சேர்ந்து கலந்துவிட்டன. அவற்றை தானியக்கி, பொறியியக்கி, ஈருருளி, மை எழுதுகோல், பண்டாரம் முதலிய சொற்களைக் கொண்டு அப்புறப்படுத்த முயலுவது கடினமாகும்’ என்று குறிப்பிடுகிறார். (தமிழோசை – முல்லை நிலையம்). ÷தமிழ்மொழி மீது தீவிர பற்றுக் கொண்டு ஜீவானந்தம் என்கிற தனது பெயரை (பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் சொரிமுத்து) “உயிர் இன்பன்’ என்று மாற்றிக் கொண்டதோடு, மேடையில் தனித்தமிழில் மணிக்கணக்காகச் சொற்பொழிவாற்றும் ஆற்றல் மிக்கவராகவும் விளங்கினார் ஜீவா. அவர் சிராவயலில் நடத்தி வந்த ஆசிரமத்துக்கு ஒருமுறை தமிழறிஞர் வ.ரா. (வ. ராமசாமி) வந்திருந்தார். அன்று “நாடும் இளைஞர்களும்’ என்ற தலைப்பில் ஜீவா ஒரு மணிநேரம் தூய தமிழில் உரையாற்றினார். அதனைக் கேட்ட வ.ரா. மிகவும் வியப்படைந்து ஜீவாவிடம், “இம்மாதிரி பிரசங்கத்தை நான் கேட்டதே இல்லை. இவ்விதம் பேசக்கூடியவர்கள் தமிழ்நாட்டில் மிகச் சிலரே’ என்று பாராட்டிவிட்டு, வேறு ஓர் ஆக்கமான யோசனையையும் சொன்னார். “”உங்களை நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் நன்மையை உத்தேசித்து, தமிழ் மொழியின் வளர்ச்சியையும் உத்தேசித்து, தயவுசெய்து தனித் தமிழை விட்டு விடுங்கள். நீங்கள் என்னதான் அபூர்வமாகப் பேசியபோதும், உங்களுடைய தமிழைப் பாமர மக்களால் புரிந்துகொள்ள முடியாது. இது மக்களுடைய மொழியல்ல” என்பதாகும் அந்த யோசனை. ÷அவரது அந்த யோசனை அன்றைக்கு ஜீவாவுக்கு கசப்பானதாகவே இருந்தது. ஆயினும், காலவரையில் ஏற்பட்ட அனுபவத்தில் அவர் தமது தூய தமிழ் போக்கினை மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று. ÷1927-ம் ஆண்டுவாக்கில் செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டிலும், சென்னையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கூட்டத்திலும் கலந்துகொண்ட ஜீவா, மறைமலையடிகளாரைப் பார்க்கப் போனார். மறைமலையடிகள் சென்னை, பல்லாவரத்தில் குடியிருந்தார். ÷மறைமலையடிகள் வீட்டை அடைந்து, கதவைத் தட்டியபோது கேட்ட குரல் ஜீவாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கேட்ட குரல், தனித்தமிழ் இயக்கத்தின் ஆதர்ச நாயகனாகக் கருதப்பட்ட சுவாமி வேதாச்சலத்தின் குரல். அது தனித் தமிழாக இருக்கவில்லை. ÷””யாரது போஸ்ட்மேனா?” என்று தனது இனிய மொழியில், தனித்தமிழ் வித்தகர் ஜீவாவை வரவேற்றார். அடுத்தபடியாக “”என்ன காரணம் பற்றி வந்தீர்கள்” என்ற வினா. “”காரணம் என்ற வார்த்தை தமிழ்ச் சொல்லா அல்லது பிற மொழிச் சொல்லா?” என்று ஜீவா திரும்பக் கேட்டார். ÷”எம்மொழிச் சொல் என்று இன்னும் முடிவு கட்டப்படவில்லை” மறைமலையடிகளின் பதில். “”ஏது, மூலம் எனும் சொற்கள் தமிழ்ச் சொற்கள் தாமே?” ஜீவா கேட்டார். ÷””ஆமாம்” அவரது பதில். “”அங்ஙனமாயின் ஏது, மூலம் ஆகிய சொற்களைப் புழங்குதல் அன்றோ சால்புடைத்து” “”ஆம்!” ÷இப்படிப் பதில் சொல்லிவிட்டு, சுவாமி வேதாச்சலம், பேச்சின் போக்கைத் திசை திருப்ப வேண்டி, நூல் நூற்பதையும், கதர் ஆடை அணிவதையும் கடுமையாகத் தாக்கிப் பேச ஆரம்பித்தார். ஜீவாவோ, கடுமையாகப் பதில் சொல்லி அடிகளாரின் வாதத்தை மறுத்துவிட்டு வெளியேறினார். ÷தனித் தமிழ் இயக்கத்தின் தலைவராக மதிக்கப்பட்ட தூய தமிழ்வாதியான சுவாமி வேதாச்சலமும், அவர் கூட்டத்தினரும் சம்ஸ்கிருத எதிர்ப்பாளர்களாக இருந்ததோடு மட்டுமல்லாமல், ஆங்கில ஆதரவாளர்களாக இருப்பதை ஜீவா உணரலானார். யதார்த்த வாழ்வில், மறைமலை அடிகளாரால் தூய தமிழை உபயோகிக்க முடியவில்லை என்கிற உண்மையும் புலப்படலாயிற்று. ÷பிற்காலத்தில், தலைமறைவு வாழ்க்கையின்போது, மக்களுடன் ஜீவனுள்ள தொடர்பு கொள்ள வேண்டும் என்றால், வ.ரா. சொன்னதுபோல், மக்கள் மொழியிலேயே பேச வேண்டும் என்ற உண்மை அவருக்குப் புரியலாயிற்று. (ஜீவானந்தம் – டி. செல்வராஜ் – சாகித்ய அகாதெமி). ÷இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம். “முரசொலி’ நாளிதழில் மூதறிஞர் ராஜாஜியைப் பற்றிக் குறிப்பிடும்போது இராசாசி என்றுதான் எழுதப்பட்டு வந்தது. “முரசொலி’ ஆசிரியருக்கு ராஜாஜியிடமிருந்து ஒரு தபால்கார்டு வந்தது. அதில் அவர் எழுப்பியிருந்த கேள்வி இதுதான் – முரசொலியில் எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஜி.ராமச்சந்திரன் என்றும், ஜெயலலிதா, ஜெயலலிதா என்றும் குறிப்பிடப்படும்போது தனது பெயர் மட்டும் ஏன் இராசாசி என்று குறிப்பிடப்படுகிறது? அதுமுதல் “முரசொலி’ அவரை மூதறிஞர் ராஜாஜி என்றே குறிப்பிடத் தொடங்கியது. ÷வடமொழிக் கலப்பும் சரி, பிறமொழிக் கலப்பும் சரி, அடிப்படையையே சிதைக்காமல் இருப்பதுவரை அனுமதிக்கப்படத்தான் வேண்டும். இல்லையென்றால் மொழி வழக்கொழிந்து விடும். அதற்காகத் தேவையில்லாமல் ஆங்கிலம் கலந்து பேசுவதும், பெயருக்குத் தமிழ் வார்த்தைகளைக் கையாண்டு பேசுவதும் ஏற்புடையதல்ல. அப்பா, அம்மாவை – டாடி, மம்மி என்று கூப்பிடுவதும் தவறு. அதற்காக ஜெட், ராக்கெட், பஸ், கார் போன்ற நவீன கண்டுபிடிப்புகளுக்குத் தமிழ்ப் பெயர்களைத் தேடித் திரிவதும் தேவையில்லாத வேலை என்றே தோன்றுகிறது. http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=220165&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?

உலகம் அழிந்துவிடுமா?

விரைவில் உலகம் அழிந்துவிடுமா? அண்மைக்காலமாக மனித குலத்தின் ஆழ்மனத்தில்
வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் கேள்வி இது.

÷திருச்சியில் கல்லூரி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற முன்னாள் குடியரசுத்
தலைவர் அப்துல்கலாமிடம் ஒரு மாணவி இதைக் கேட்டார். ஒரு கணம் மெüனித்த
அந்த விஞ்ஞானி, அப்புறம் இப்படி பதில் தந்தார்: “”இல்லை. பூமியில் 1000
கோடி ஆண்டுகள் சூரிய வெளிச்சம் இருக்கும் என்று விஞ்ஞானி சந்திரசேகர் தன்
ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்.

தற்போது 500 கோடி ஆண்டுகளே முடிவடைந்துள்ளன. இன்னும் 500 கோடி ஆண்டுகள்
உள்ளன. ஆகையால், கவலைப்படத் தேவையில்லை.”

   அந்த மாணவி என்றில்லை; இயற்கையின் மீதும், சக மனிதர்கள் மீதும் எந்த
அக்கறையும் இல்லாதவர்களையும்கூட இந்தக் கேள்வி
பதற்றத்துக்குள்ளாக்குகிறது. மாயர்களின் நாகரிகத்தில் தொடங்கி புவி
வெப்பமயமாதல் கருதுகோள் வரை சகலமும் இந்தக் கேள்வியாளர்களின் மனத்தை
கேள்வியை நோக்கித் தள்ளுகின்றன. பனிமலைகள் உருகுகின்றன; மலைகள்
சரிகின்றன; கடல்மட்டம் உயர்கிறது; தீவுகள் மூழ்குகின்றன. உலகம்
அழிந்துவிடுமா?

   எப்படி இந்த உலகைக் காப்பது? தேவையற்ற நேரங்களில் மின் சாதனங்களை
அணைத்தா? பாலிதீன் பைகளைத் தவிர்க்க கடைக்கு துணிப் பைகளை எடுத்துச்
சென்றா? இனி,காருக்குப் பதில் பஸ்ஸிலேயே பயணம் மேற்கொண்டா?

உலகின் அத்தனைதொழிற்சாலைகளையும் செம்மையான தொழில்நுட்பத்தின் கீழ்
மாற்றியா? எப்படி உலகைக் காப்பது? மனிதர்களின் பதற்றம் பரிதாபத்தை
ஏற்படுத்துகிறது.

   உலகின் மிகப்பெரிய பாலைவனமாக இன்று காட்சியளிக்கும் சஹாரா
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நீர்நிலைகள் நிறைந்த பசுமையான
பகுதியாக இருந்தது. விஞ்ஞானிகள், புவியியலாளர்கள் சொல்கிறார்கள்.

பின்னாளில், ஏதோ ஓர் அழிவு சக்தியில்-எரிகற்களின் மோதலில் அல்லது ஒரு
கொடும் தீப்புயலில் நிலத்திலிருந்த யாவும் எரிந்தழிய பாலையானது சஹாரா.
விஞ்ஞானிகள், புவியியலாளர்கள் சொல்கிறார்கள்.

 ÷யாரால், எதனால் ஏற்பட்டது அந்த தீப்புயல்? பல கோடி ஆண்டுகளாகக் கோள்கள்
இருக்கின்றன. பல கோடி ஆண்டுகளாக புவியும் இருக்கிறது. மனிதனால் எதை மாற்ற
முடியும்?

மனிதன் தீயை உருவாக்கக் கற்றுக்கொண்டபோதே அழிவு சக்தி உருவாகிவிட்டது.
சக்கரத்தை அவன் கண்டறிந்தபோது அந்த அழிவு சக்தி நூறு கால்களையும்
கொண்டது. ஆயுதங்களை அவன் கண்டுணர்ந்தபோது அழிக்க முடியாத சக்தியை அந்த
அழிவு சக்தி பெற்றது. இந்தப் பயணம் நிலையானது. தவிர்க்க முடியாதது.

 அடர் வனங்கள், லட்சக்கணக்கான தாவர இனங்கள், பல்லாயிரக்கணக்கான
பாலூட்டிகள், பறவைகள், உயிரோட்டமிக்க நீர்நிலைகள், நீர்வாழ் உயிரினங்கள்,
ஒட்டுண்ணிகள், நுண்ணியிரிகள் யாவும் அழிந்துகொண்டிருக்கின்றன.

சிங்கங்கள், புலிகள், கானுறை வேங்கைகள், ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள்,
ஓங்கில்கள்,சோலைப்பாடிகள், பிணந்தின்னிக்கழுகுகள் யாவும்
அருகிக்கொண்டிருக்கின்றன. மனிதன் மட்டும் எப்படித் தப்ப முடியும்?

சீன ஞானி லா வோட்சு சொன்னதுபோல,””வானகமும் வையகமும் நிரந்தரமாக நீடிக்க
முடியாதபோது மனிதன் எப்படி நீடிக்க முடியும்?”

    புன்சிரிப்போடு பதில் சொல்லுங்கள்: உலகம் அழிந்துவிடுமா?
அழிந்தால்தான் நாம் என்ன செய்யப்போகிறோம்?

வானகமும் வையகமும் அடர் வனங்களும் உயிரோட்டமிக்க நீர்நிலைகளும்
பல்லாயிரக்கணக்கான பாலூட்டிகளும் பறவைகளும் நீர்வாழ் உயிரினங்களும்
அழிந்துகொண்டிருக்க மனிதன் மட்டும் எப்படி நீடிக்க முடியும்?
சிங்கங்களும் புலிகளும் கானுறை வேங்கைகளும் ஒற்றைக்கொம்பு
காண்டாமிருகங்களும் ஓங்கில்களும் சோலைப்பாடிகளும்
பிணந்தின்னிக்கழுகுகளும் அழிந்த  பின் மனிதன் மட்டும் ஏன் நீடிக்க
வேண்டும்?
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=220795&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE?